For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அராஜகத்திற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக பந்த் நடக்கும் - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News


புதுக்கோட்டை:

அக்டோபர் 1ம் தேதி அராஜகத்திற்கு எந்தவித இடமும் கொடுக்காமல், அராஜகத்த விளைவிக்க யார் முயன்றாலும் அதற்கு இடம் கொடுக்காமல், அமைதியான முறையில் பந்த்Karunanidhi நடைபெற கூட்டணிக் கட்சிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில், நேற்று ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் 5வது கட்ட விநியோகத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், 1163 பேருக்கு 2 ஏக்கர் இலவச நிலம், 2321 பேருக்கு வீட்டு மனைப் பட்டா, 404 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவிகளை முதல்வர் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்திற்கு அனுமதி அளித்ததே வாஜ்பாய் அரசுதான். இந்த முறையிலேதான் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என திட்டம் வகுத்துக் கொடுத்தவரும் வாஜ்பாய்தான்.

இந்த நிலையில் வாஜ்பாய் ஆட்சி மறைந்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. அது அமைந்தவுடன் நான் அந்த ஆட்சுக்கு நினைவூட்டியது இரண்டு.

ஒன்று உணர்வுப்பூர்வமானது, இன்னொன்று வாழ்வுப் பூர்வமானது. உணர்வுப்பூர்வமானது என்னவென்றால் எங்களுடைய மொழிக்கு செம்மொழி என்ற தகுதியைத் தர வேண்டும் என்பது.

அதேபோலத்தான் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு, நம்முடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு காலத்திலே திராவிடத்தினுடைய வணிகத் தொடர்பும் உலகெல்லாம் பரவியிருந்தது. நம்முடைய தமிழ்நாட்டு முத்துக்களை, கிளியோபாட்ரா, அவர் குடிக்கிற சாராயத்திலே போட்டுக் கலக்கிக் குடித்தாள் என்றெல்லாம் நம்முடைய முத்து வியாபாரத்தில் உள்ள பெருமையை அந்தக் காலத்திலேயே நாம் பேசியிருக்கிறோம்.

அப்படிப்பட்ட உலகத் தொடர்புக்கு வழி வகுக்கக் கூடிய, வாணிப வியாபாரத்திலே முன்னேற்றம், பொருளாதாரத்திலே வலிவு இவ்வளவும் உண்டாக்கக் கூடிய ஒரு திட்டம்தான் சேது சமுத்திரத் திட்டம்.

இந்தத் திட்டம் விரைவில் முடியும் என்று எல்லோரும் முகம் மலர்ந்திருக்கின்ற நிலையில், திடீரென்று அந்தத் திட்டத்ைத நிறைவேற்றக் கூடாது என்று சிலர் கொடி பிடிக்கிறார்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தை அண்ணா தொடங்கினார். இந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் அண்ணா. 1967ல் அவர் முதல்வராக பதவியேற்றவுடன், தமிழகம் முழுவதும் எழுச்சி நாள் கொண்டாடினார்.

சேது சமுத்திரத் திட்டம், நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கம், சேலம் இரும்புத் தொழிற்சாலை இவற்றையெல்லாம் இணைந்து எழுச்சி நாள் கொண்டாடியவர் அண்ணா.

அப்போது யார் யார் நம்முடைய அண்ணாவோடு சேர்ந்து இந்தத் திட்டம் தேவை என்றார்களோ, அவர்களெல்லாம் தான் இன்று இந்தத் திட்டத்திற்கு எதிராக அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த தேர்தல், அதற்கு முந்தைய தேர்தல், இந்த சமயங்களில் அனைத்துக் கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை வாங்கிப் பாருங்கள். திமுகவானாலும் சரி, பாமகவானாலும் சரி, அதிமுகவானாலும் சரி, அதில் என்ன எழுதப்பட்டுள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்ற வாதாடுவோம், போராடுவோம், வலியுறுத்துவோம், அது நிறைவேற பாடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறோம்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள். அதில், ராமேஸ்வரத்திற்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகள் இவற்றையெல்லாம் அகற்றி, ஆழப்படுத்தி விட்டு கால்வாய் அமைப்பதுதான் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம்.

சொன்னது யார் தெரியுமா. இன்றைக்கு அதை ராமர் பாலம் என்று சொல்லி அதைத் தடுக்கிற அம்மையார்தான் அன்றைக்கு அவர் கைப்பட எழுதிய தேர்தல் அறிக்கையில், சொல்லுகிறார்.

ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையில் உள்ள ஆடம் பாலம் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்குத் தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளையெல்லாம் வெட்டி, அகற்றி, ஆழப்படுத்தி கால்வாய் அமைப்புதாதன் சேது சமுத்திரத் திட்டத்தின் தலையாய நோக்கம். இதையும் ஜெயலலிதாதான் அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார். சொல்லியிருக்கிறாரா, இல்லையா.

தென்னகம் பயன்பெறக் கூடிய திட்டத்தை, பொருளாதாரம் வளம் பெறக் கூடிய ஒரு திட்டத்தை வேண்டாம் என்று இன்றைக்கு சொல்வதற்குக் காரணம், அந்தப் பெயரும், புகழும் கருணாநிதிக்கு வந்து விடுமோ, சோனியா காந்திக்கு வந்து விடுமோ, மன்மோகன் சிங்குக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்தான் இந்த்த திட்டமே வேண்டாம் என்கிறார்கள்.

இதை ராமர் கட்டிய பாலம் என்கிறார்கள். யார் சொன்னது ராமர் கட்டிய பாலம் என்று. அதிமுக தேர்தல் அறிக்கையிலே ராமர் பாலம் பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்களா, அப்படி சொல்லியிருந்தால் நாளைக்கே கொண்டு வந்து காட்டுங்கள். நான் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன்.

இதை நாங்கள் அனுமதிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை என்று வாஜ்பாய் கூறட்டும். இதை தெரிந்தேதான் அனுமதித்தோம் அல்லது தெரியாமல் அனுமதித்து விட்டோம் என்று வாஜ்பாய் சொல்கிறாரா என்பதை அறிய விரும்புகிறேன்.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களுக்குச் சொல்கிறேன். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. யாருடைய பேச்சையும் கேட்டு ஏமாறுகிறவர்கள் அல்ல, எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல.

அக்டோபர் 1ம் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதை அரசாங்கம் நடத்தவில்லை. ஆனால் அரசாங்கத்தை நடத்துகிற கட்சிகள், அரசாங்கத்திற்கு ஆதரவாக இருக்கிற கட்சிகள் இதிலே ஈடுபடுகின்றன என்றால், அவர்கள் அரசாங்கத்தை நடத்துவதால், இந்த அரசு நடத்த வேண்டிய ஒரு திட்டத்தை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

அப்படிப்பட்ட நிலையிலேதான் வருகிற அக்டோபர் 1ம் - 2ம் தேதி உத்தமர் காந்தி பிறந்த நாள், அதை யாரும் மறந்து விடக் கூடாது - காந்தியடிகள் எந்த அன்பு, அகிம்சைக்காக பாடுபட்டாரோ, எந்த வன்முறையை ஒழிக்கப் பாடுபட்டரோ, அதை மனதில் கொண்டு, அராஜகத்தை விளைவிக்க வேண்டுமென்று யார் முயன்றாலும், அந்த முயற்சிகளை முளையிலேயே கிள்ளி விட்டு, அவற்றுக்கு இடம் தராமல், துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பார்களே அதேபோல, தூர விலகிக் கொண்டு, நாம் நம்முடைய குறிக்கோள், சேது சமுத்திரத் திட்டம்.

அந்தத் திட்டம் வந்தால், தமிழ்நாட்டு மக்கள் தென்னாட்டு மக்கள் வாழ வழி ஏற்படும். அவர்களுடைய வருங்காலம் ஒளிமயமாகும். அதை உருவாக்க இந்தத் திட்டத்தை கொண்டு வர நம்மை அர்ப்பணித்துக் கொள்வோம்.

நம்மை நாமே துன்புறுத்திக் கொண்டு, நம்மை நாமே தியாகம் செய்து கொண்டு நம்முடைய திட்டத்திற்காக எதிர்கால சந்ததிகளுக்காகப் பாடுபடுவோம்.

புதுக்கோட்டைக்கு ஒருமுறை இங்கிருந்த எனது நண்பர் அருணாச்சலத்தின் வீட்டுக்கு வந்தேன். நான் திருவாரூரிலிருந்து வர வேண்டும். நான் கிளம்ப வேண்டிய நேரத்தில் எனது மனைவிக்குப் உயிருக்குப் போராட வேண்டிய சூழ்நிலை. டாக்டர்கள் கை விட்டு விட்டார்கள். போவதா, வேண்டாமா என்று நான் தயங்கிக் கொண்டிருந்தேன்.

அப்போது அருணாச்சலமே அங்கு வந்து விட்டார். மனைவியைப் பாருங்கள் என்றேன். எப்படியும் கூட்டம் நடத்த வேண்டும், விளம்பரம் எல்லாம் செய்து விட்டேன் என்றார் அவர்.

எனது மனைவியின் நிலையைப் பார்த்து அவரும் அழுதார். வீட்டில் உள்ளவர்களும் அழுதார்கள். இந்த நிலையில் கூட்டிச் செல்கிறீர்களே என்று அருணாச்சலத்திடம் கேட்டார்கள். கேட்டவர்களின் கண்ணீரைத் துடைத்து விட்டு, வாருங்கள் போகலாம் என்று அருணாச்சலத்துடன் இங்கு வந்தேன்.

பேசி விட்டுத் திரும்பிச் செல்ல ரயில்லோ, பேருந்தோ கிடைக்காத காரணத்தால் ஒரு லாரியில் ஏறி திருவாரூரைச் சேர்ந்தேன். என்னுடைய மனைவியைப் பார்க்க உள்ளே போனால், மனைவியைப் பார்க்க முடியவில்லை. மனைவியின் சடலத்தைத்தான் பார்த்தேன்.

என்னுடைய கடைசி முத்தத்தை, எனது மனைவிக்கு அந்த சடலத்திற்குத்தான் தந்தேன். இதுதான் எனது பொதுவாழ்க்கை. பொது வாழ்க்கையில் நான் கண்ட இன்பங்களில் இதுவும் ஒன்று. நான் சந்தித்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X