இலங்கையிலிருந்து மீண்ட 10 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை திரும்பினர்

Subscribe to Oneindia Tamil


சென்னை:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ள 10 ராமேஸ்வரம் மீனவர்களும் விமானம் மூலம் நேற்று சென்னை திரும்பினர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த மாதம் 10ம் தேதி மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே இந்தியப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களைத் தாக்கினர்.

பின்னர் மாணிக்கம், அமலன், ஸ்டாலின், ஜெயமணி, தேவேந்திரன், வேலு, சங்கர், நெல்சன், குருசந்திரன் சரவணன் ஆகிய 10 மீனவர்களை மட்டும் பிடித்துக் கொண்டு சென்றனர்.

அனைவரும் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை மீட்கக் கோரி மீனவர்கள் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதி மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.

இதன் பயனாக கடந்த 20ம் தேதி மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை தமிழகத்திற்கு அனுப்ப இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டது.

நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட 10 பேரும் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று மாலை சென்னைக்கு வந்து சேர்ந்த 10 மீனவர்களையும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்று கட்டித் தழுவி கதறி அழுதனர். பின்னர் அனைவரும் வேன் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...