சேது: சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர திருமாவளவன் கோரிக்கை
திருச்சி:
சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வருகிற 17ம் தேதி தொடங்கும் சட்டசபைக் கூட்டத் தொடரில் சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மதப் பிரச்சினையை காரணம் காட்டி சில மதவாத, இனவாத சக்திகள் சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்த முயலுகின்றன. இதை அனுமதிக்க முடியாது.
டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கருத்தறியும் கூட்டத்தின் முடிவுகளை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கவுள்ளோம்.
நிலங்களைத் தரும் முடிவை விவசாயிகளிடம் விட்டு விட வேண்டும். அவர்களை யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தலித் சமுதாயத்தினர் நுழைவதற்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது. இதுகுறித்து சட்டசபையில் விடுதலைச் சிறுத்தைகள் பிரச்சினை எழுப்புவார்கள்.
இலங்கையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை மத்திய அரசு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
சேலத்தில் திருமாவளவன் கைது:
முன்னதாக நேற்று சேலத்தில் கோவில் நுழைவு போராட்டம் நடத்திய தொல்.திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலுக்கும் வழிபாடு நடத்துவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த இரண்டு பிரிவினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் தலித் சமூகத்தினர் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.
இதனால் திருமாவளவன் மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் செய்ததையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் திரவுபதி அம்மன் கோயிலுக்குள் நுழையும் போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பேரணியாக திரவுபதி அம்மன் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.
இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்து திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, திரவுபதி அம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருவதால், எல்லா தரப்பு மக்களையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications