பாகிஸ்தானில் அவசர நிலை - தலைவர்கள், நீதிபதிகள் கைது

Subscribe to Oneindia Tamil

Musharrafஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி உள்ளிட்ட 8 நீதிபதிகள், இம்ரான்கான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ராணுவச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானில் அதிபர் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேர்தலை நடத்தலாம், இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை முடிவை வெளியிடக் கூடாது என்று தடை விதித்தது.

இதனால் அதிபர் தேர்தல் முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. தீர்ப்பு முஷாரப்புக்கு சாதகமாக இருக்காது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. இதனால் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு சில வாரங்களாகவே நிலவி வந்தது.

இந்த நிலையில் நேற்று திடீரென அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் முஷாரப். தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டைக் காக்கவும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக முஷாரப் காரணம் கூறியுள்ளார்.

நீதிபதிகள் கைது:

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டவுடன் தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் உள்ளிட்ட 8 உச்சநீதிமன்ற நீதிபதிகள், பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.

புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அப்துல் ஹமீத் தோகார் நியமிக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். இவர், முஷாரப் மீதான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர். முஷாரப்புக்கு சாதகமானவர்.

முஷாரப் அறிவித்த அவசர நிலையை செல்லாது என்று அறிவிக்க தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் முடிவெடுத்ததால் அவர்களை முஷாரப் கைது செய்ய உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் நாட்டு அரசியல் சட்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து அதிகாரமும் முஷாரப்புக்கு மாற்றப்பட்டு விட்டது. நாடு முழுவதும் தொலைபேசி, செல்போன் சேவை துண்டிக்கப்பட்டு விட்டது.

தனியார் டிவி ஒளிபரப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் ராணுவ கவச வாகனங்கள் ரோந்து சுற்றி வருகின்றன. தெருக்கள், சாலைகள், முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான்கான் கைது:

நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நீதிக் கட்சியின் தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானும் ஒருவர்.

கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அதேசமயம், நாடாளுமன்றமும், மாநில சட்டசபைகளும் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பதட்டம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் பெரும் பயத்துடன் உள்ளனர்.

ஏன் அவசர நிலை - முஷாரப் விளக்கம்:

Musharraf with Abdul Hameed dogarஅவசர நிலையை பிரகடனப்படுத்திய பின்னர் நள்ளிரவில் முஷாரப் அரசு டிவி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், பாகிஸ்தான் இப்போது மிகவும் சிரமமான நிலையில் உள்ளது. சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

இந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், நாட்டின் ஒற்றுமையும், பாதுகாப்பும் மிகவும் கேள்விக்குறியதாகி விடும்.

பாகிஸ்தான்தான் முதலில் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குத்தான் நான் முன்னுரிமை கொடுப்பேன். இதே எண்ணத்தில்தான் ஒட்டுமொத்த நாடும் இருக்கும் என்று நம்புகிறேன்.

தீவிரவாதமும், பயங்கரவாதமும் அதிகரித்து விட்டன. தொடர்ந்து நடந்து வரும் தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நாட்டைய பேரழிவுக்கு இட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளன.

தற்கொலைப் படை தீவிரவாதிகள் நாட்டில் சுதந்திரமாக உலவும் நிலை ஏற்பட்டு விட்டது. இதைத் தடுக்க வேண்டிய நீதிமன்றங்கள், வேறு வழக்குகளில் அக்கறை காட்டி வருகின்றன.

தீவிரவாதிகள், இஸ்லாமியின் கடுமையான பகுதிகளை பிரதானப்படுத்தி அவற்றை பாகிஸ்தான் மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பையும், ஜனநாயக நெறிமுறைகளையும் காக்கவே இந்த நடவடிக்கையை நான் எடுக்க நேரிட்டது.

பாகிஸ்தான் சீர்குலையும் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை உரிய நேரத்தில் தடுத்து நிறுத்தாவிட்டால் அது பொருளாதாரம், சமூக கலாச்சாரத்தையும் சீரழித்து விடும்.

இப்போது நாம் அமைதியாக இருந்து விட்டால் அது தற்கொலை செய்வதற்குச் சமமாகி விடும். நாடு தற்கொலையை நோக்கி செல்வதை நான் அனுமதிக்க முடியாது.

நாட்டில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட, ஸ்திரத்தன்மை அதிகரிக்க மீடியாக்களும் முக்கிய காரணம். இநத நிலை குறித்து பிரதமரும் என்னிடம் வருத்தப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் ஆட்சியை நடத்துவது இயலாத காரியம் என்று அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே, அனைத்துத் தரப்பினருடனும் விரிவாக ஆலோசித்த பின்னர்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜனநாயகத்தை நிலை நாட்ட நான் எடுத்துள்ள 3வது கட்ட நடவடிக்கை இது. இதன் மூலம் ஜனநாயகம் மீண்டும் தழைக்கும் என்றார் முஷாரப்.

பெனாசிர் நாடு திரும்பினார்:

Benazir Bhuttoஇதற்கிடையே, துபாய் சென்றிருந்த பெனாசிர் பூட்டோ அவசர நிலை பிரகடனத்தைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக நாடு திரும்பினார்.

கராச்சி திரும்பிய அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இது ஒரு மினி ராணுவச் சட்டம். நாங்கள் இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதை எதிர்த்துப் போராடுவோம் என்றார்.

முன்னதாக ஸ்கை நியூஸ் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில், முஷாரப் தான் கூறிய வாக்குறுதிகளை அவரே மீறியுள்ளார். ஜனநாயகத்தை மீண்டும் தழைக்கச் செய்வேன் என்று என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது கூறினார். ஆனால் இப்போது ராணுவச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து பிற கட்சிகளுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நான் முடிவெடுப்பேன்.

முஷாரப் தனது முடிவை திரும்பப் பெற வேண்டும். அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வாய்ப்பு ஏற்படும்.

முஷாரப் தனது நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என உலக நாடுகள் அவரை அறிவுறுத்த வேண்டும். நீதித்துறையை மதிக்க வேண்டும் என கண்டிக்க வேண்டும். தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில்தான் இந்த முடிவை முஷாரப் எடுத்திருப்பதாக கருதுகிறேன் என்றார் பூட்டோ.

அமெரிக்கா ஏமாற்றம் - இந்தியா கவலை:

முஷாரப்பின் நடவடிக்கை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்படுவதாக உள்ள நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த முஷாரப் முன்வர வேண்டும் என அது தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கார்டன் ஜோன்ட்ரோ கூறுகையில், இது மிகவும் ஏமாற்றம் தருகிறது.

தேர்தலை நியாயமாக நடத்துவேன் என்று தான் ஏற்கனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்ற அவர் முன்வர வேண்டும். ராணுவத் தலைமைத் தளபதி பதவியிலிருந்து விலகுவேன் என்ற வாக்குறுதியிலும் அவர் உறுதியாக இருக்க வேண்டும்.

பாகிஸ்தானில் மீண்டும் ஜனநாயகம் மலர அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

இந்த நிலையில் துருக்கி சென்றுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறுகையில், முஷாரப்பின் நடவடிக்கை தன்னை பாதித்துள்ளாக தெரிவித்தார். இது ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாக இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நிலவரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாகிஸ்தான் தற்போது கடந்து கொண்டிருக்கும் இக்கட்டான நிலை குறித்து இந்தியா கவலை அடைந்துள்ளது.

இந்த நிலை விரைவில் மாறி மீண்டும் அங்கு ஜனநாயகம் தழைக்கும் என்று நம்புகிறோம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

மன்மோகன் - பிரணாப் முகர்ஜி ஆலோசனை:

இந்த நிலையில் பாகிஸ்தான் விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவசர ஆலோசனை நடத்தினர்.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த புதிய சூழ்நிலையால் ஏற்படும் விளைவுகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

பாகிஸ்தான் நிலவரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் வீரப்ப மொய்லி கூறுகையில், பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே துணைக் கண்டத்தைச் சேர்ந்தவை. அங்கு என்ன நடந்தாலும் அது நம்மையும் பாதிக்கும். எனவே பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரம் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதுதான் இந்தியாவின் விருப்பம். விரைவில் அங்கு சுமூக நிலை திரும்ப விரும்புகிறோம் என்றார்.

பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதற்கு பாஜகவும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முஷாரப் மேற்கொண்டுள்ள நடவடிக்கை இது என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+