உ.பி சட்டசபையில் பெரியார் ராமாயணத்திற்கு எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தந்தை பெரியார் எழுதிய உண்மையான ராமாயணம் (சச்சி ராமாயணா) நூலை உ.பி. மாநிலத்தில் விற்பனை செய்ய மாயாவதி அரசு அனுமதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாடி, காங்கிரஸ், பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பியதால் உ.பி. சட்டசபையில் பெரும் அமளி நிலவியது.

தந்தை பெரியார் எழுதிய ராமாயணம் இந்தியில் சச்சி ராமாயணா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு உ.பியில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நேற்று உ.பி. சட்டசபையில் இந்த மூன்று முக்கிய கட்சிகளும் பிரச்சினை எழுப்பின. இந்தப் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி மூன்று கட்சிகள் சார்பிலும் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

அதற்கு சபாநாயகர் சுக்தேவ் ராஜ்பார் கூறுகையில், இது உடனடி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல. எனவே இப்போது அவையின் பிற நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு பெரியார் ராமாயணம் குறித்து விவாதிக்க வேண்டியதில்லை என்றார்.

ஆனால் இதற்கு மூன்று கட்சிகளின் உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், உ.பியில் சச்சி ராமாயணம் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. யாருக்கும், யாருடைய நம்பிக்கையையும் விமர்சிக்க உரிமை இல்லை.

இந்த நூலை எதிர்ப்பதில் பாஜக மட்டும் ஈடுபடவில்லை. நாங்களும் கூட இந்த நூலை எதிர்க்கிறோம் என்றார்.

சட்டசபை காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், மாயாவதி 1995ம் ஆண்டு முதல்வர் பதவிக்கு வந்தபோதே இந்த நூலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்மீண்டும் ஆட்சிக்கு வந்த நிலையில், பெரியார் ராமாயணம் விற்பனைக்கு விடப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சியினரின் வாதங்களை நிராகரித்து மாநில சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் லால்ஜி வர்மா கூறுகையில், இது பழைய பிரச்சினை. இப்போது தேவையில்லாமல் கிளறுகிறார்கள். வேறு புதிய பிரச்சினை இல்லாததால், இந்தப் பழைய பிரச்சனையை தோண்டி எடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அவரது பேச்சைத் தொடர்ந்து ஆவேசமடைந்த சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டபடி சபையின் மையப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு நின்றபடி அரசுக்கு எதிராகவும், முதல்வர் மாயாவதிக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அவர்களுடன் பாஜகவினரும் சேர்ந்து கொண்டனர். புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த அமளி நடந்தபோது முதல்வர் மாயாவதி சட்டசபையில் இல்லை.

மூன்று துருவங்களாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் சமாஜ்வாடிக் கட்சி ஆகியவை பெரியார் ராமாயணப் பிரச்சினையில் ஓரணியில் இணைந்திருப்பது உ.பி. அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+