இந்திய டாக்டர்களுக்கு எதிரான உத்தரவு - பிரிட்டன் கோர்ட் ரத்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்திய டாக்டர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை லண்டன் உயர்நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. பிற ஐரோப்பிய நாடுகளின் டாக்டர்களுக்கு சமமாக இந்திய டாக்டர்களும் நடத்தப்பட வேண்டும், பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்று நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை அளித்துள்ளது.

இங்கிலாந்தில் பணியாற்றி வரும் டாக்டர்களுக்கும், இங்கிலாந்துக் கனவில் உள்ள பிற இந்திய டாக்டர்களுக்கும் இது மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

லண்டன் உயர்நீதிமன்றத்தில், இங்கிலாந்தில் பணியற்றும் இந்திய வம்சவாளி டாக்டர்கள் சங்கம் ஒரு வழக்குப் பதிவு செய்தது. அந்த மனுவில், இங்கிலாந்து சுகாதாரத் துறை, தேசிய மருத்துவ சேவை நிறுவனங்களுக்கு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதில், ஐரோப்பிய மற்றும் இங்கிலாந்து டாக்டர்களுக்குரிய கல்வித் தகுதி உள்ளிட்ட பிற தகுதிகளுடன் கூடிய டாக்டர்களை மட்டுமே தேசிய சுகாதார சேவை மையங்களில் (மருத்துவமனைகளில்) பணியமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை நிச்சயம் இந்தியா உள்ளிட்ட பிற நாட்டு டாக்டர்களால் பூர்த்தி செய்ய முடியாது. காரணம், அவர்களது நாட்டு சுகாதாரப் படிப்புக்கான பாடத் திட்டம் வேறு, ஐரோப்பிய நாடுகளில் கற்றுத் தரப்படும் பாடத் திட்டம் வேறு.

இந்திய டாக்டர்களுக்கு எதிரான இன துவேஷ நடவடிக்கை இது. இது பாரபட்சமானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் செட்லி, மாரிஸ் கே, ரீமர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஐரோப்பிய டாக்டர்களைப் போலவே இந்திய வம்சவாளி டாக்டர்களையும், பிற டாக்டர்களையும் கருத வேண்டும். பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று அதிரடித் தீர்ப்பினை அளித்து, அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்கு இந்திய வம்சாவளி டாக்டர்கள் சங்கம் பெரும் வரவேற்பும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளது. சங்கத் துணைத் தலைவர் டாக்டர் ராம் லட்சுமண் இதுகுறித்துக் கூறுகையில், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். எங்களது தீபாவளியை மகிழ்ச்சிக்குரியதாக்கியுள்ளது லண்டன் உயர்நீதிமன்றம்.

கடந்த 18 மாதங்களாக இங்கிலாந்து அரசின் இந்த உத்தரவால் நாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தோம். இப்போதுதான் நிம்மதி பிறந்துள்ளது என்றார்.

இன்னொரு துணைத் தலைவரான டாக்டர் சதீஷ் மாத்யூ கூறுகையில், இங்கிலாந்து சுகாதாரத் துறையின் உத்தரவு இனப் பாகுபாடுடன் கூடியது என்று கூறியதோடு, அது தேசிய மருத்துவ சேவை நிறுவனங்களுக்கு தவறான வழிகாட்டுதலை காட்டியுள்ளதாகவும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்த உத்தரவின் மூலம் இந்திய டாக்டர்களும், பிற சர்வதேச டாக்டர்களும், இனிமேல் இங்கிலாந்தில் ஐரோப்பிய டாக்டர்களுக்கு இணையான கவுரவத்துடன் நடத்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இங்கிலாந்தில் மொத்தமாக 25 ஆயிரம் இந்திய வம்சவாளி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு பேரிடியைத் தருவது போன்ற இந்த உத்தரவை இங்கிலாந்து அரசு பிறப்பித்தது. இதை எதிர்த்து இந்திய வம்சவாளி டாக்டர்கள் சங்கம் போராடி வந்தது. தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த சங்கம் கடந்த 1998ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+