கொந்தளிக்கிறது மேற்கு வங்கம் - மம்தா எம்.பி பதவி ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

Mamata Banerjeeகொல்கத்தா: நந்திகிராம் விவகாரம் தொடர்பாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நந்திகிராமில் நிலைமை மோசமடைந்திருப்பதாக மாநில ஆளுநர் கூறியிருப்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபமடைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. விவசாயிகளின் போராட்டம் தற்போது பெரும் வன்முறையாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு போலீஸ் துப்பாக்கிச் சூடும் தினசரி சம்பவமாக மாறியுள்ளது.

நேற்று நந்திகிராமில் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர். இதனால் மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எம்.பி. பதவியை உதறினார் மம்தா:

இந்த நிலையில் நந்திகிராம் விவகாரம் தொடர்பாக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

இதுகுறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நந்திகிராம் விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மகா மோசமாக செயல்படுகிறது. அங்கு ரத்த ஆறு ஓடுகிறது. இதற்கு மேற்கு வங்க அரசுதான் காரணம்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். எனது ராஜினாமாக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி விட்டேன். லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு நகலை அனுப்பி வைத்துள்ளேன்.

மேற்கு வங்க மாநிலத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் காலவரையற்ற போராட்டம் நடத்தப் போகிறோம். இந்த அரசு போக வேண்டும். அதுவரை போராட்டத்தை நடத்துவோம் என்றார் மம்தா.

முன்னதாக, நேற்று இரவு மம்தா பானர்ஜி, தனது கட்சித் தொண்டர்களுடன் நந்திகிராமுக்குக் கிளம்பினார். ஆனால் அவரையும், திரிணமூல் கட்சியினரையும் கோலாகாட் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பத்திரிக்கையாளர்களையும் தொடர்ந்து செல்ல மார்க்சிஸ்ட் கட்சியினர் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீஸார், மார்க்சிஸ்ட் கட்சியினரை கண்டுகொள்ளாமல் இருந்ததால் பெரும் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

ஆளுநர் பேச்சு - சிபிஎம் கோபம்:

இதற்கிடையே மேற்கு வங்க மாநில ஆளுநர் கோபாலாகிருஷ்ண காந்தி, நந்திகிராம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் இடதுசாரிக் கூட்டணி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

ஆளுநர் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், நந்திகிராமில் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. அங்கு சட்டம் ஒழுங்கு சுத்தமாக இல்லை. மாநில அரசு வன்முறையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்தது போலத் தெரியவில்லை.

வன்முறையைத் தடுக்கவும், அங்கு அமைதியை ஏற்படுத்தவும், அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பேச்சு நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆளுநரின் இந்த அறிக்கையை இடதுசாரிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். ஆளுநரின் அறிக்கை சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்று அவர்கள் வர்ணித்துள்ளனர்.

அமைச்சரும் போர்க்கொடி:

இந்த நிலையில் புத்ததேவ் பட்டச்சார்யாவுக்கு மேலும் ஒரு நெருக்கடியாக அவரது அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும், புரட்சிகர சோசலிஷ கட்சியின் மூத்தத் தலைவரான ஷித்தி கோஸ்வாமி, நந்திகிராம் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் அமைச்சரவையில் நீடிக்க விரும்பவில்லை. எனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புகிறேன். இதற்கு கட்சி என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறினார். இதனால் புத்ததேவ் அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

வருகிறது சி.ஆர்.பி.எப்:

இதற்கிடையே, நந்திகிராமில் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதால் அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நக்சலைட்டுக்களை ஒடுக்கிய அனுபவம் உடைய 1000 பேர் கொண்ட சி.ஆர்.பி.எப். படை நந்திகிராமுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நாளை பந்த்:

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் நாளை பந்த் நடத்த மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இந்த பந்த்துக்கு பாஜக, காங்கிரஸ், பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+