முதல்வர் தலையீடு-மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்

எம்.பி.பி.எஸ் படிப்பை ஆறரை ஆண்டுகளாக உயர்த்தியும், கிராமப் புறங்களில் மாணவர்கள் கட்டாயம் ஒரு வருடம் பணிபுரிய வேண்டும் என்றும் மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை வாபஸ் பெறக் கோரி கடந்த 3 நாட்களாக சென்னை மருத்துவக் கல்லூரியில் மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தவிர ஒரு பிரிவு மாணவர்-மாணவியர் மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அதிமுக, மதிமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் அவர்களை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
இந் நிலையில் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த மருத்து மாணவர்களின் பிரதிநிதிகள் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இன்று காலை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் பேசி தீர்வு காண முயற்சி செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.
முதல்வரின் இந்த உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரதம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications