மீண்டும் உருவானது அரியலூர் மாவட்டம்
அரியலூர்: பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்டத்தை நேற்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
விழாவில் ஸ்டாலின் அவர் பேசுகையில்,
எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கிறதோ, கருணாநிதி முதல்வராக இருக்கிறாரோ அப்போதெல்லாம் மாவட்டங்களின் வளர்ச்சி எந்த அளவு இருந்திருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.
1956ம் ஆண்டு தமிழகத்தில் 14 மாவட்டங்கள் இருந்தன. 1965ம் ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தர்மபுரி உருவானது. பின்னர் பல்வேறு மாவட்டங்கள் உருவாகின. தற்போது அரியலூர் பகுதி மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி அவர்கள் மகிழும்படி 31வது மாவட்டமாக அரியலூர் உருவாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் உருவானபோதே அரியலூரை தலைநகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு அதை நிறைவேற்ற முன் வரவில்லை.
திமுக ஆட்சிக் காலத்தில் 2001ம் ஆண்டில் முதன் முதலாக அரியலூர் மாவட்டம் உதயமானது. அடுத்து வந்த அதிமுக இந்த மாவட்டத்தை பெரம்பலூருடன் இணைத்தது. 2006ல் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்ட நிலையில் தற்போது அரியலூர் மாவட்டம் மீண்டும் உதயமாகி உள்ளது.
நான் தொடங்கி வைக்கும் முதல் மாவட்டம் இது என கூறினார்கள். இந்த மாவட்டம் தமிழகத்தின் முதல் மாவட்டமாக வரவேண்டும் என விரும்புகிறேன். வரும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஜெயங்கொண்டத்தில் அமைய உள்ள பழுப்பு நிலக்கரி மின் நிலையத்தால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
அரியலூர் மாவட்டத்தை பிரித்த உடன் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதிகள் குறையும் என்ற ஏக்கம் அந்த பகுதி மக்களுக்கு இருக்கும். அதை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய மருத்துவ கல்லூரி வேண்டும் என்ற மத்திய மந்திரி ராசா கோரிக்கை வைத்துள்ளார். ராசா சொன்னால் முதல்வர் தட்டமாட்டார்.
கிராமங்களுக்கு செல்லும்போது முன்பெல்லாம் தண்ணீர் வசதி, சாலை வசதி கேட்டார்கள். இப்போது கலர் டிவி கேட்கிறார்கள். குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி நிச்சயமாகக் கிடைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications