பாலாறு அணை வழக்கு: விரைவில் விசாரிக்க தமிழகம் கோரிக்கை
சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பாலாற்றின் குறுக்கே அம்மாநில அரசு அணை கட்டும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரிய மனுவை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுகியுள்ளது.
இது தொடர்பான மனுவை தமிழக அரசு கடந்த வாரம் தாக்கல் செய்ததாக மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், பாலாற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தின் வட மாவட்டங்களை அது கடுமையாக பாதிக்கும். மேலும் சென்னை மாநகரில் பெரும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும்.
இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. ஆனால் தற்போது டிசம்பர் 6ம் தேதி ஆந்திர அரசு புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
எனவே பாலாற்றில் ஆந்திரா அணை கட்டுவதை எதிர்த்துத் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். நானும் டெல்லியில் உள்ள நமது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசி விரைவில் இந்த வழக்கை விசாரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன். விரைவில் ஆந்திர அரசின் முயற்சிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
முல்லைப் பெரியாற்றில் புதிதாக அணை கட்டத் திட்டமிட்டுள்ள கேரள அரசு பல சட்டநடைமுறைகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே அந்த அரசால் உடனடியாக புதிய அணையை கட்டி விட முடியாது. அதில் பல சட்டச் சிக்கல்கள் உள்ளன என்றார் துரைமுருகன்.


Click it and Unblock the Notifications
