3வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை
கோபிசெட்டிப்பாளையம்: 3வது மாடியில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கையிலிருந்து கீழே விழுந்த கைக்குழந்தை அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பியது.
சென்னையைச் சேர்ந்தவர் மோகன்குமார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மோகன்குமார் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்திற்கு சென்று அங்குள்ள ஒரு ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
அப்போது மோகன்குமாரின் ஒன்றரை வயது குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததால், அதன் தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மாடியின் பால்கனியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அழுது கொண்டிருந்த குழந்தை திடீரென தாயின் கையிலிருந்து நழுவி கீழே விழுந்து விட்டது.
இதைப் பார்த்த மோகன் குமாரும், அவருடைய மனைவியும் அலறியடித்துக் கொண்டு கீழே ஓடினர். ஆனால் நல்ல வேளையாக கை தவறி கீழே விழுந்த குழந்தை ரோட்டில் சென்ற பெண்ணின் மீது உரசிக் கொண்டு விழுந்ததால் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
கீழே வந்த மோகன்குமாரும், மனைவியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் பெரிய ஆபத்து ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகே அவர்கள் நிம்மதியடைந்தனர்.
இவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்த குழந்தை கடவுள் அருளால் தான் உயிர் பிழைத்தது என்று அப்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் கூறினர்.