வெடிகுண்டு மிரட்டல்-சபரிமலை கோவிலில் தீவிர கண்காணிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கடந்த வாரம் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நக்ஸல்கள் பெயரில் அந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து கோவில் உட்பட அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போலீசார், உளவுத்துறையினர் மாறுவேடத்தில் பக்தர்களோடு பக்தர்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
பக்தர்கள் கொண்டு வரும் இருமுடி மற்றும் தேங்காய் ஆகியவற்றை கடும் சோதனைக்கு பின்னரே சன்னிதானத்துக்கு கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.
மேலும் கோவில் சன்னிதானத்தில் பணி புரியும் ஊழியர்கள் மற்றும் கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் போட்டோ மற்றும் விரல் அடையாளங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
போட்டோ இல்லாத தொழிலாளர்களுக்கு போலீசாரே டிஜிட்டல் காமிரா மூலம் போட்டோ எடுத்து கொடுக்கின்றனர்.
முன்பு தேவசம் போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் வழங்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை மட்டும் ஊழியர்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது போலீசார் வழங்கும் அடையாள அட்டையையும் தொழிலாளர்கள் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
