பிரான்சில் அதிவேக வயர்லெஸ் நெட்வோர்க்-இந்திய நிறுவனம் சாதனை
பெங்களூர்: இந்தியாவைச் சேர்ந்த வயர்லெஸ் கட்டமைப்பு நிறுவனமான ஸ்லோகா டெலிகாம், பிரான்ஸின் செயின்ட் மெடார்ட் என் ஜாலெஸ் நகரில், அதிவேக வைமாக்ஸ் (WIMAX) நெட்வோர்க்கை ஏற்படுத்தி அமைத்து சாதனை படைத்துள்ளது.
பிரான்ஸில் நிறுவப்பட்டுள்ள முதல் அதிவேக வைமேக்ஸ் கட்டமைப்பு இது தான்.
ஸ்லோகா டெலிகாம் நிறுவனம் வயர்லெஸ் கட்டமைப்புத் துறையில் முன்னணியில் உள்ள இந்திய நிறுவனமாகும். வயர்லெஸ் துறையினருக்குத் தேவையான உபகரணங்களை இது தயாரித்து விற்கிறது.
கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது. இங்குதான் இந்த நிறுவனத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவும் உள்ளது.
அடுத்த தலைமுறை வயர்லெஸ் சாதனங்களைத் தயாரிப்பதிலும், வைமாக்ஸ் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதிலும் ஸ்லோகா டெலிகாம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதி நவீன வைமாக்ஸ் நெட்வோர்க்கை பிரான்ஸில் முதல் முறையாக இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
இதன் பரீட்சார்த்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும், டிசம்பர் மாதம் முதல் இது அமல்படுத்தப்படவுள்ளதாகவும் ஸ்லோகா டெலிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்லோகா டெலிகாமும், சூப்பர்நெட் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்து இதை செயல்படுத்துகின்றன. இதுகுறித்து சூப்பர்நெட் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி மணீஷ் ராய் கூறுகையில்,
ஸ்லோகா நிறுவனத்தின் வைமாக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பேஸ் நிலையங்கள்தான் 5.8 கிகாஹெர்ட்ஸ் சக்தி கொண்டதாக விளங்குகின்றன. எனவேதான் இதை பிரான்ஸில் செயல்படுத்த தீர்மானித்தோம் என்றார்.
பிரான்ஸின் ஆர்டி நெட்ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ரட்சேரி காம்பி கூறுகையில், ஐரோப்பியக் கண்டத்திலேயே 5.8 கிகாஹெர்டஸ் திறன் கொண்ட நெட்ஒர்க்கை அமல்படுத்தும் முதல் நிறுவனம் எங்களுடையது தான்.
இதன் மூலம் செயின்ட் மெடாட்ர் என் ஜலெஸ் நகரம் ஐரோப்பாவிலேயே முன் மாதிரி நகராக மாறியுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல பிரான்ஸ் நகரங்களில் 5.8 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட வைமாக்ஸ் நெட்ஒர்க் உபகரணங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
சூப்பர்நெட் மற்றும் ஆர்டி நெட்ஒர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து கடந்த 7 ஆண்டுகளாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வயர்லெஸ் கட்டமைப்புகளை நிறுவி வருகின்றன.
5.8 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட வயர்லெஸ் கட்டமைப்பு உபகரணங்களை சந்தைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில், ஸ்லோகா டெலிகாமும், வேவ்சாட் நிறுவனமும் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
