அன்புமணிக்கு எதிராக எய்ம்ஸ் டாக்டர்களும் போராட்டம்
டெல்லி: டெல்லியில் உள்ள எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம்) மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கு எதிராக காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளதால் நோயாளிகள் அனைவரும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
டாக்டர்கள் ஓய்வு பெறும் காலம் தொடர்பாகவும், எய்ம்ஸ் நிர்வாகத்தை மாற்றியமைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வரவுள்ளது.
இது தொடர்பாக சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(எய்ம்ஸ் தலைவரான வேணுகோபாலின் பதவியைப் பறிக்க இந்த சட்டத் திருத்தம் வகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவ மாணவர்களை வேணுகோபால் தூண்டிவிட்டதாக புகார் உள்ளது நினைவுகூறத்தக்கது)
இந்த வேலை நிறுத்தத்தால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் அனைவரும் டாக்டர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பீகாரைச் சேர்ந்த சாசாராம் என்ற நோயாளி கூறியதாவது,
எங்களுக்கு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வது தெரியாது. நாங்கள் பீகாரில் இருந்து அதிக பணம் செலவழித்து ரயிலில் வந்துள்ளோம். ஆனால் இங்குள்ள மருத்துவர்களோ எங்களுடைய நிலைமையை புரிந்து கொள்ளாமல் சுயநலத்துடன் செயல்படுகிறார்கள் என்று ஆத்திரத்துடன் கூறினார்.
இந்தப் போராட்டம் குறித்து ஹார்ஷ் என்ற டாக்டர் கூறியதாவது,
டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்யும் இந்த நேரத்தில் எந்த நோயாளியாவது இறக்க நேரிட்டால் அதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியும் தான் முழுப் பொறுப்பு என்றார்.
தினமும் 5,000 முதல் 7,000 நோயாளிகள் வரை சிகிச்சை பெறும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று 50 டாக்டர்கள் பணிக்கு வரவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனை தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
மருத்துவப் படிப்பை ஒன்றரை ஆண்டுகாலம் நீட்டிக்கவும், மருத்துவர்கள் கட்டாய கிராம சேவை செய்யவும் உத்தரவிட்ட அன்புமணிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் போராட்டம் கிளம்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வேணுகோபால் மனு:
இந் நிலையில் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் வேணுகோபால், அகில இந்திய மருத்துவக் கழகத்தின் தலைவர் பணிக்கான வயது மூப்பு வரம்பை 65 என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications