இலங்கையைப் போல மலேசியாவிலும் இனப் படுகொலை: தமிழர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

{image-Demonstrators with Gandhi posters250_29112007.jpg tamil.oneindia.com}சிங்கப்பூர்: இலங்கை அரசு நடத்தும் இனப் படுகொலையைப் போல மலேசிய அரசும் தமிழர்களை அழித்தொழிக்கும் இனப் படுகொலையை நடத்தி வருவதாக மலேசியத் தமிழர்கள் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மலேசிய வாழ் இந்திய வம்சாவளியினர், குறிப்பாக தமிழர்கள் மலேசிய அரசின் இனப் பாகுபாட்டுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தங்களை இரண்டாம் தர குடிமக்களாக மலேசிய அரசு நடத்தி வருவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை வலியுறுத்தி இங்கிலாந்து தூதரகத்தில் மனு கொடுக்கச் சென்ற தமிழர்களை மலேசிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கி ஒடுக்கியது. இந்த செயலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழக அரசியல் கட்சிகள், காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனுக்கு இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக் கடிதம் ஹிண்ட்ராப் அமைப்பின் பிளாக்கில் (blog) வெளியாகியுள்ளது.

அதில், மலேசிய அரசில் ஆதிக்கம் செலுத்தி வரும் உம்னோவின் (ஐக்கிய மலாய் தேசிய இயக்கம்) துணையுடன் இந்தியர்களுக்கு எதிராக, குறிப்பாக தமிழர்களுக்கு எதிராக இன ஒழிப்பு நடவடிக்கையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் இனவெறிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய சிறுபான்மையினரை அழித்து ஒழிக்கும் இனப் படுகொலையில் மலேசிய அரசு இறங்கியுள்ளது.

இலங்கை அரசு மேற்கொண்டு வருவதைப் போன்ற இன துவேஷ, இனப் படுகொலையில் மலேசிய அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் இங்கிலாந்து அரசு தலையிட வேண்டும். மலேசியாவை உலக நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி அதைத் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் குறித்து மலேசிய அமைச்சர் நஸ்ரி அஜீஸ் விளக்கம் அளித்துள்ளார். சிங்கப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த கடிதம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இந்த கடிதத்தை ஹிண்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வெளியிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் மூலம் அரசுக்கு எதிராகவும், மலாய் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் இந்தியர்களைத் தூண்டி விட அவர் முயற்சிக்கிறார்.

இலங்கையைப் போல மலேசியாவிலும் தமிழ் இனப் படுகொலை நடப்பதாக அவர் கூறியிருப்பது சாதாரண வார்த்தை அல்ல. அரசுக்கு எதிராக அவர்கள் சவால் விடக் கூடாது. இந்த கடிதத்தால் ஏற்படும் விளைவுக்கு உதயக்குமார்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கோலாலம்பூரில் பேரணி நடத்தியவர்கள் குண்டர்கள் என்று நான் கூறியதில் தவறில்லை. இந்த வார்த்தையை நான் மறுபடியும் கூறுகிறேன். இதற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயக நடவடிக்கைகக் கட்சியின் கோரிக்கையை நான் ஏற்க மாட்டேன்.

அவர்கள் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தியவர்கள். எனவே அவர்களை அப்படித்தான் கூற முடியும். நான் ஒட்டு மொத்த இந்திய சமுதாயத்தினரையும் குறை கூறவில்லை. போராட்டத்தை நடத்தியவர்களை மட்டுமே கூறுகிறேன்.

20 லட்சம் இந்தியர்கள் வசிக்கும் மலேசியாவில் 20 ஆயிரம் பேரின் கருத்துக்களை பெரும்பான்மையானவர்களின் கருத்து என்று கூறி விட முடியாது என்று கூறியுள்ளார் அஜீஸ்.

80 பேர் மீது வழக்கு:

இதற்கிடையே, கோலாலம்பூரில் நடந்த போராட்டத்தில் கைதானவர்களில் 80 பேர் மீது அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்டவிரோதாமாக கூடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+