சாலை மறியல் செய்த நரிக்குறவர்கள் மீது தடியடி
பழனி: பழனி அருகே நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்ட நரிக்குறவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
பழனி அருகே, பழனி - உடுமலைப்பேட்டை சாலையில், சுக்கமநாயக்கன்பட்டி என்ற இடத்தில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த கண்டவா என்ற நரிக்குறவரை போலீஸார், பறவை வேட்டை தொடர்பாக பிடித்துச் சென்றிருந்தனர். இந்த நிலையில், கண்டவாவின் தாயார் இறந்து விட்டார். இதையடுத்து அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கண்டவாவை அனுமதிக்க வேண்டும் என நரிக்குறவர்கள் போலீஸாரை அணுகி கோரினர். ஆனால் அதை ஏற்க போலீஸார் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இறந்த பெண்ணின் உடலுடன் பழனி - உடுமலைப்பேட்டை சாலையில் நரிக்குறவ சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கண்டவாவை விட்டால்தான் கலைந்து போவோம் என நரிக்குறவர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து போலீஸார் தடியடியில் இறங்கினர். இதை எதிர்த்து நரிக்குறவர்களும் அடிதடியில் குதித்தனர். இதில் 6 போலீஸார் காயமடைந்தனர். பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நரிக்குறவர்கள் சிலரும் தடியடியில் படுகாயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 20 நரிக்குறவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
இந்தப் போராட்டத்திற்குப் பிறகு நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் நுழைந்த போலீஸார் அங்கு கண்மூடித்தனாக தாக்குதலில் ஈடுபட்டதாக நரிக்குறவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதை போலீஸார் மறுத்துள்ளனர்.
நிலைமை பதட்டமாக இருப்பதால் சுக்கமநாயக்கன்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications