சட்டத்தின் பலனை பெற அப்சலுக்கு உரிமை உண்டு: பிரதமர்
அகமதாபாத்: நாட்டின் பிற குடிமக்களைப் போல அப்சல் குருவுக்கும், சட்டத்தின் பலன்களைப் பெற உரிமை உண்டு. அப்சல் குரு வழக்கு தற்போது சட்ட நடைமுறையில் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் விவகாரம் தற்போது சட்ட நடைமுறையில் உள்ளது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்டத்தின் பலன்களை பெறும் உரிமை உண்டு. அப்சல் குருவுக்கும் இது பொருந்தும். சட்டம் தனது கடமையைச் செய்யும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றார் சிங்.
குஜராத் மாநிலத்தில் அச்ச உணர்வு நிலவுகிறது. மக்கள் எப்போதும் பய உணர்வுடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மாறும். மக்களிடையே இப்போது நல்ல மாற்றம் தெரிகிறது. நிச்சயம் இது தற்போது உள்ள அரசுக்கு மாற்றாக புது அரசு வர வழி வகுக்கும்.
குஜராத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக கூறுவதில் உண்மையில்லை. அது நியாயமற்ற குற்றச்சாட்டு.
காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி. எனவேதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் அறிவிக்கவில்லை. தேர்தல் முடிந்த பிறகு எம்.எல்.ஏக்கள் கூடி இதை முடிவு செய்வார்கள் என்றார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications