For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக இளைஞரணி மாநாடு-நெல்லையில் விழாக்கோலம்

By Staff
Google Oneindia Tamil News

திருநெல்வேலி: திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு நெல்லை நகரமே அலங்காரங்கள், தோரணங்கள் என திரும்பிய திசையெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தமிழகத்தில் திமுக இளைஞரணிக்கு என முதல்முறையாக தனி மாநாடு வருகிற 15, 16 ஆகிய தேதிகளில் நெல்லையில் நடைபெறுகிறது.

இதற்கென நெல்லை மருத்துவ கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. மாநாட்டின் முகப்பு பணிகள் நிறைவு பெற்று விட்டன. உள் அலங்கார வேலைகளும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

நெல்லை முழுவதும் அலங்கார வளைவுகளும், வரவேற்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு மாநாட்டுக்கு வருவோரை வரவேற்க தயார் நிலையில் உள்ளன. ஒரு சில இடங்களை தவிர மற்ற இடங்களில் எல்லாம் வரவேற்பு கோபுரங்கள் அலங்கார விளக்குகளால் இரவு நேரங்களில் ஜொலிக்கின்றன.

அதே போல் திரும்புகிற பக்கமெல்லாம் வண்ண டிஜிட்டல் போர்டுகள் மற்றும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது. கருணாநிதியின் இளமைகால படங்கள், ஸ்டாலின், அழகிரி போன்றோர் படங்கள் திரும்பும் திசையெல்லாம் மின்னுகின்றன.

கழக கொடிகளும் சாலைகள் முழுவதும் நடப்பட்டுள்ளது. வித்தியாசமான முறைகளில் தயார் செய்யப்பட்ட டிஜிட்டல் பேனர் திரும்பிய திசையெல்லாம் அமைக்கப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை நினைவு படுத்தும் வகையில் கப்பல் ஒன்றும், கடலில் அது மிதப்பது போன்ற அலங்கார விளக்குகளால் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர வண்ணார்பேட்டை பகுதியில் உலக அரங்கில் முக்கிய இடம் பெற்ற கன்பூசியஸ், டார்வின், பிளேட்டோ, சேகுவாரா, புத்தர், காரல் மார்க்ஸ், ரூஸோ ஆகியோரின் படங்கள் அடங்கிய கல்வெட்டுகள் போன்ற அமைப்பு மாநகர திமுகவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பணிகளை அமைச்சர்கள் அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். முக்கியமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் முதல்வர் அலுவலகம், அவர் தங்கும் அறைகள், முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள், பேரணியை முதல்வர் பார்வையிடுவதற்காக அமைக்கப்படும் மேடை ஆகியவற்றின் இறுதிகட்ட பணிகள் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.

முக்கிய பணிகள் நிறைவு பெற்ற நிலையில் மாநாட்டுக்குக்காக அலங்கரிக்கப்பட்டுள்ள பந்தல் அரங்கை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இது வரை திரைபடங்களில் மட்டுமே பார்த்து வந்த அரங்க அமைப்பை நேரில் பார்க்கும் நெல்லை மக்கள் பிரமிப்புடன் திரும்பி செல்கின்றனர்.

4 லட்சம் தொண்டர்களின் பிரமாண்ட பேரணி

மாநாட்டு மேடை மட்டும் ஒரே நேரத்தில் 200 பேர் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பந்தலின் உள்புறம் ஆற்று மணல் பரப்பி இருக்கைகள் போடும் பணியும் இன்று இரவுடன் முடிவடைகிறது.

இதற்காக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் சேர்கள் மாநாட்டு திடலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேடை அருகே காவிய கலைஞர்-84' என்ற ஒலி-ஒளி கண்காட்சி நடைபெறும் தனி அரங்குகள் அமைக்கும் பணியும் முடிவடைந்து ஒத்திகை நடந்து வருகிறது.

மாநாட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று திமுக இளைஞரணி பொறுப்பாளரும், அமைச்சருமான ஸ்டாலின் மாநாட்டு திடலுக்கு சென்று அனைத்து பணிகளையும் பார்வையிட்டார். மாநாடு வெற்றிகரமாக நடப்பது குறித்து திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்காக சுமார் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் தமிழகம் முழுவதும் இருந்து திமுக முக்கிய நிர்வாகிகளும் நெல்லை வந்துள்ளனர்.

நாளை மறுநாள் 15ம் தேதி (சனிக்கிழமை) அனைவரும் எதிர்பார்க்கும் பிரம்மாண்ட திமுக இளைஞரணி முதல் மாநில மாநாடு தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்கமாக அமைச்சர் தங்கபாண்டியனின் தங்கையும், கல்லூரிப் பேராசிரியையும், கவிஞருமான தமிழச்சி தங்க பாண்டியன் மாநாட்டு திடல் முன்பு திமுக கொடியேற்றுகிறார். திமுக இளைஞரணி துணை செயலாளர் புகழேந்தி மாநாட்டு பந்தலை திறந்து வைக்கிறார்.

பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பாளை வ.உ.சி. மைதானத்திலிருந்து மாபெரும் பேரணி தொடங்குகிறது. பேரணியை மத்திய அமைச்சர் ராஜா தொடங்கி வைக்கிறார்.

பேரணியின் முன் ஸ்டாலின் இளைஞரணியின் வெள்ளை சீருடை அணிந்து, திறந்த ஜீப்பில் அணி வகுத்து செல்வார். அவருக்கு முன்பு ஸ்டாலின் வயதை குறிக்கும் வகையில் 56 குதிரைகளில் இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் குதிரைப்படை அணி வகுப்பு போல் செல்வார்கள்.

ஸ்டாலின் பின்னால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பயிற்சி பெற்ற இளைஞர் அணியினர் தலா 100 பேர் வீதம் 3,000 பேர் அணிவகுத்து செல்வார்கள்.

அவர்களுக்கு பின்னால் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மும்பை மாநிலங்களை சேர்ந்த இளைஞர் அணியினர் வெள்ளை சீருடையுடன் பேரணியாக செல்வார்கள். சுமார் 4 லட்சம் இளைஞர்கள் இந்த பேரணியில் வெள்ளை சீருடையுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிமேடையில் பார்வையிடும் கருணாநிதி

பேரணியை பாளை. அரசு மருத்துவமனை அருகே உள்ள தனி மேடையில் நின்று முதல்வர் கருணாநிதி பார்வையிடுகிறார். திமுகவின் முதுபெரும் தலைவர்கள் அமர்ந்து பேரணியை பார்வையிடுவதற்காக அதன் அருகே தனி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம் உள்பட பல வீர விளையாட்டுக்களும் இடம் பெறுகிறது.

பேரணி முடிந்ததும் மாநாட்டு திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள 22 தனி அரங்குகளில் காவிய கலைஞர்-84' என்ற ஒலி-ஒளி காட்சி நடைபெறுகிறது. 500 மாணவ-மாணவிகள், நாடகக் கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை நடித்து காட்டுகிறார்கள்.

இந் நிகழ்ச்சியை திராவிட கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து ஆகியோருடன் அமர்ந்து முதல்வர் பார்வையிடுகிறார்.

நிகழ்ச்சியை பொது மக்கள், திமுக தொண்டர்கள் பார்ப்பதற்கு வசதியாக சுமார் 50,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 2 மணி நேரம் நடக்கும் இந்த நிகழ்ச்சியோடு முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

16ம் தேதி காலை திமுக இளைஞரணி மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

9.30 மணிக்கு நெல்லை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் துணை மேயர் முத்துராமலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் பேசுகிறார்கள்.

12.30 மணிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பின்னர் இளைஞர்களுக்கான முக்கிய தலைப்புகளில் எம்பிக்கள் திருச்சி சிவா, கனிமொழி உள்பட 28 பேர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

மாலை 6 மணிக்கு மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியான சிறப்புக் கூட்டம் நடை பெறுகிறது. இதில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பேசுகிறார்கள். இறுதியாக கருணாநிதி மாநாட்டு பேருரையாற்றுகிறார்.

பலத்த பாதுகாப்பு

மாநாட்டு திடல் மற்றும் நெல்லை மாநகரம் முழுவதும் அதிரடிப் படை, சிறப்பு காவல்படை போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

குவியும் தொண்டர்கள்

இதற்கிடையே, தமிழகம் முழுவதிலுமிருந்து திமுக தொண்டர்கள், இளைஞரணியினர் நெல்லையில் குவிந்து வருகின்றனர்.

தென் சென்னை மாவட்டத்தில் இருந்து 250 பஸ்களிலும், வடசென்னையில் இருந்து 200 பஸ்களிலும் தொண்டர்கள் செல்கிறார்கள்.

இது தவிர நெல்லை, அனந்தபுரி, கன்னியாகுமரி, குருவாயூர் ஆகிய ரெயில்களிலும் தொண்டர்கள் செல்கிறார்கள். தொண்டர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தொண்டர்கள் தங்குவதற்காக நெல்லையில் எல்லா திருமண மண்டபங்களும், பள்ளிகளும் புக் செய்யப்பட்டுவிட்டன.

மாவட்ட வாரியாக வரும் தொண்டர்கள்

அணி வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அணிவகுத்து வரவேண்டிய வரிசை விபரத்தை மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலில் நெல்லை மாவட்டம் அதை தொடர்ந்து கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், தென் சென்னை, வடசென்னை, கடலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, புதுவை, ஆந்திரா, மும்பை பிற மாநிலங்கள்.

வாக்கி டாக்கியில் மிரட்டல்

இதற்கிடையே நேற்றிரவு 9.40 மணியளவில் மாநகர காவல்துறையின் வாக்கி டாக்கியில் ஒரு மர்ம குரல் ஒலித்தது.

அதில் பேசிய நபர், நான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேசுகிறேன். ராஜீவ் காந்தியின் மரணத்தால் எனது மரியாதை குறைந்து விட்டது. இதனால் திமுக மாநாட்டை விடுதலை புலிகள் சீர்குலைப்பார்கள் என்று கூறினார்.

பின்னர் அவர் முதல்வர் கருணாநிதி குரலிலும் பேசினார். நான் 10 நாட்களாக நெல்லையில் சுற்றி வருகிறேன். என்னை யாரும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பல குரலில் அரை மணி நேரம் மாறி, மாறி பேசியதை கேட்ட போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து டி.ஐ.ஜி கண்ணப்பன், கமிஷனர் மஞ்சுநாதா, துணை கமிஷனர்கள் தினகரன், ஜெயசந்திரன் ஆகியோர் மாநாட்டு பந்தல் மற்றும் கால் கட்டுபாட்டு அறைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். பழைய வாக்கி டாக்கியை பயன்படுத்தி குடிபோதையில் யாராவது பேசியிருக்கலாம் என்றும் அந்த நபர் ஓய்வு பெற்ற போலீஸ்காரராக இருக்கலாம் என்றும் கமிஷனர் மஞ்சுநாதா தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாநகர பகுதிகளில் வாக்கி டாக்கிகளை பயனபடுத்தும் காவல் துறையினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தியும் வாக்கி டாக்கியில் பேசிய நபரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X