மழையால் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் - கிருஷ்ணசாமி
சென்னை: தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில், அரசு விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு 13 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் இதில் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் நிவாரண மையங்களை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும், தங்குமிட வசதியும் செய்து தரப்பட வேண்டும். தொற்று நோய்கள் ஏதும் பரவாமல் இருக்க மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவக் குழுவை அனுப்ப வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சரிவர செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதில் தாமதம் ஏற்பட அரசு அனுமதிக்கக் கூடாது.
அனைத்து துறை அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று உடனடி நிவாரண உதவிகளை அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications