For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூட்டோ குடும்பத்தைத் துரத்தும் படுகொலைகள்

By Staff
Google Oneindia Tamil News


இஸ்லாமபாத்: பெனாசிர் படுகொலை, பூட்டோ குடும்பத்தில் ஏற்பட்ட நான்காவது துயரச் சம்பவமாகும்.

பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் பெனாசிர் பூட்டோ. அவரது தந்தை சுல்பிகர் அலி பூட்டோவில் ஆரம்பித்து பெனாசிர் (வயது 54) வரை இதுவரை நான்கு பேர் பூட்டோ குடும்பத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முதல் பலி பூட்டோ:

1979ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதி பூட்டோ குடும்பம் முதல் படுகொலையைச் சந்தித்தது. அன்றைய தினம், பூட்டோ தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.

உலகம் முழுவதும் பூட்டோவை தூக்கிலிடக் கூடாது என்று கோரியும் கூட அதை சற்றும் கண்டுகொள்ளாமல் தூக்கிலிட்டுக் கொன்றார் அப்போதைய சர்வாதிகாரி ஜியா உல் ஹக்.

அதைத் தொடர்ந்தே பெனாசிர் பாகிஸ்தான் அரசியல் களம் புகுந்தார். பூட்டோ கொல்லப்பட்ட அடுத்த ஆண்டு பெனாசிரின் சகோதரர் ஷானவாஸ் பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்டார்.

இன்னொரு சகோதரரான மீர் முர்தஸா 1996ம் ஆண்டு, பெனாசிர் பிரதமராக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இப்போது நான்காவது உறுப்பினரையும் அகோரமாக இழந்துள்ளது பூட்டோ குடும்பம்.

1953ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி பிறந்தவர் பெனாசிர். அவரது குடும்பம் பாகிஸ்தான் மக்களின் அன்பைப் பெற்றிருந்த அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பம்.

16 வயது வரை பாகிஸ்தானில் வளர்ந்த பெனாசிர் பின்னர் லண்டன் சென்றார். அங்குள்ள ராட்கிளிப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்தார்.

1977ல் சுல்பிகர் அலி பூட்டோ பிரதமர் ஆனார். இதையடுத்து பெனாசிர் பாகிஸ்தான் திரும்பினார். 1979ம் ஆண்டு பூட்டோ ஆட்சியை ராணுவப் புரட்சி மூலம் கவிழ்த்த ராணுவ சர்வாதிகாரி ஜியா உல்ஹக், பூட்டோவைத் தூக்கிலிட்டுக் கொன்றார்.

இதன் காரணமாக அரசியலில் நுழைந்தார் பெனாசிர். மிகவும் இளம் வயதில், அதாவது 35 வயதில் பாகிஸ்தான் பிரதமரானார். பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரும், இஸ்லாமிய நாடுகளிலேயே பிரதமர் பதவிக்கு உயர்ந்த முதல் பெண்ணும், இளம் வயதில் பிரதமர் ஆன பெருமைக்கும் உரியவர் பெனாசிர்.

பெனாசிரின் ஆட்சியில் பாகிஸ்தான் பல புரட்சிகளைக் கண்டது. பெண்களின் கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் பெனாசிர். இனிமேலும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க கூடாது என்று பெண்களுக்கு அறிவுறுத்தினார். பல கல்வி கூடங்களைத் திறந்தார். கிராமப்புறங்களும் புதுப் பொலிவு பெற்றன.

கலாச்சார சீர்திருத்தங்களிலும் அவர் தீவிரம் காட்டினார். பெனாசிரின் இந்த போக்கு, பழமைவாதத்திலேயே ஊறிக் கிடந்த பழமைவாத முஸ்லீம் தலைவர்கள், மத குருமார்களுக்கு அறவே பிடிக்கவில்லை. பெனாசிரை அவர்கள் வெறுக்க ஆரம்பித்தனர். எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.

அன்று ஆரம்பித்த அந்த துவேஷமும், வெறுப்பும்தான் இன்று தீவிரவாதிகள் ரூபத்தில் பெனாசிரின் உயிரைக் கூறு போட்டிருக்கிறது.

அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தேர்தலில் பெனாசிர் வெற்றி பெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்த நிலையில்தான் பெனாசிர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தானில் மட்டுமல்லாது பல முஸ்லீம்கள் நாடுகள், மேலை நாடுகளிலும் பெனாசிருக்கு தனி செல்வாக்கு இருந்து வந்தது. மேலை நாட்டு மீடியாக்களின் டார்லிங் என செல்லமாக அழைக்கப்பட்டவர் பெனாசிர்.

முஷாரப் ஆட்சிக்கு வந்த பின்னர் லண்டனிலும், துபாயிலுமாக வசித்து வந்த பெனாசிர் 8 ஆண்டுகள் கழித்து அக்டோபர் 18ம் தேதி பாகிஸ்தான் திரும்பினார் பெனாசிர்.

கராச்சியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பேரணியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே பெனாசிரின் உயிருக்குக் குறி வைக்கப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பினார். இப்போது துரதிர்ஷ்டம் அவரை காவு வாங்கி விட்டது.

நாடு திரும்புவதற்கு முன்பு துபாயில் செய்தியாளர்களிடம் பெனாசிர் பேசினார். அப்போது, உங்களது உயிருக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனரே என்று கேட்டபோது, ஒரு பெண்ணுக்கு தீங்கு இழைப்பதை இஸ்லாம் போதிக்கவில்லை. ஒரு பெண்ணைக் கொல்வது மிகவும் கேவலமானது, கோழைத்தனமானது, இழிவானது என்று இஸ்லாம் கூறுகிறது.

நான் தீவிரவாதிகளுக்குப் பயந்து பாகிஸ்தான் போவதை திரும்பப் பெறப் போவதில்லை. இறைவன் மீதும், எனது நாட்டு மக்கள் மீதும் நம்பிக்கை வைத்து அங்கு போகிறேன். எனது நாட்டுக்கு ஜனநாயகத்தைத் திருப்பித் தா இறைவா என்ற பிரார்த்தனையுடன் தாயகம் திரும்புகிறேன். எனது மக்கள் எனக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறியிருந்தார் பெனாசிர்.

நுனி நாக்கு ஆங்கிலம், துணிச்சலான செயல்பாடுகள், எதற்கும் அஞ்சாமை போன்ற பெனாசிரின் குணநலன்கள், அவரை ஒரு தனித்துவம் மிக்க பெண்ணாகவும், தலைவராகவும் வெளிக்காட்டின. அனைவருக்கும் பிடித்தவரான கவர்ச்சிகரமான தலைவராகவும், ஆளுமைத்திறன் படைத்த பெண்மணியாகவும் விளங்கிய பெனாசிரின் அகால மரணம், பாகிஸ்தான் ஜனநாயகத்திற்கு கிடைத்த பேரிடி என்பதில் சந்தேகம் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X