என்னுடைய பகுத்தறிவுக்கு வைகோ சான்றிதழ் தேவையில்லை-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil
Karunanidhi

சென்னை: என்னுடைய பகுத்தறிவு குறித்த விஷயத்தில் வைகோவின் சான்றிதழ் தேவையில்லை என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: இவ்வளவு நாட்களாக தேமுதிகவை ஒரு கட்சியாக மதிக்காத முதல்வர் கருணாநிதி, இன்றைக்கு என்னுடைய கேள்விகளுக்கு பதில் கூறியிருக்கிறார் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?

பதில்: மதுரையிலே இவரது கட்சியை தொடங்குவதற்கு முன்பே அவரது மைத்துனர் என்னை நேரில் கண்டு அதற்கான அழைப்பிதழைக் கொடுத்தவுடன், நான் நேரில் வாழ்த்து தெரிவித்ததோடு, அவர்கள் மாநாடு நடைபெற்ற போது அவர்களுக்கு கடிதம் மூலமாகவும் வாழ்த்து கடிதம் அனுப்பியவன் நான் என்பதை அவரே நன்கு அறிவார்.

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு'' என்று கூறியவர் எங்கள் அண்ணா. அந்த அண்ணாவின் கருத்தை என்றைக்கும் மதிக்கக்கூடிய நான், அவரது கட்சியை எப்படி மதிக்காமல் இருப்பேன். மதித்த காரணத்தால் தான் கட்சி தொடங்கிய நாளன்றே வாழ்த்துக் கடிதம் அனுப்பினேன்.

உலகத்திலேயே கேள்வி-பதில் இரண்டையும் எழுதும் ஒரே தலைவர் என்றும் அவர் (விஜய்காந்த்) குறிப்பிட்டிருக்கிறார். இப்போது நான் அளிக்கும் பதிலும், நான் நேற்றைய தினம் அளித்த பதிலிலும் கூட, என்னுடைய கேள்விக்கு நான் அளித்த பதில் அல்ல. விஜயகாந்த் கேட்டுள்ள கேள்விகளுக்கு அளித்துள்ள பதில்கள் தான் என்பதை வாசகர்கள் அறிவார்கள். வினா-விடை மூலமாக சில விளக்கங்களை அளிப்பது பெரியார், ராஜாஜி போன்றவர்களே கூட கடைப்பிடித்த முறைதான்.

கேள்வி: இலவச டி.வி. கொடுக்காமல் வீட்டிற்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டேன். அதற்கு பதில் கூறாமல் ஏதேதோ மழுப்பி இருப்பதாகவும் விஜயகாந்த் கூறுகிறாரே?

பதில்: இதே போன்றதொரு கருத்தினை தான் அதிமுக தலைவியும் கேட்டு அவரையும் நான் மதித்து நேற்றைய நிகழ்ச்சியின் போது பதில் கூறியிருக்கிறேன். அதே பதில் இவருக்கும் பொருந்தும். வேலை கொடுக்க வேண்டியது முக்கியம் தான். கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எத்தனை பேருக்கு அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியதன் மூலம் எத்தனை பேர் வேலை வாய்ப்புகளை பெறுகிறார்கள், வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெறுவதற்கேற்ப வேலை வாய்ப்பகங்களில் அவர்களுக்கு புதுப்பிப்பதற்காக எத்தகைய வாய்ப்புகளை அளித்துள்ளோம்.

இன்னமும் வேலை வாய்ப்புகளை கொடுக்க முடியாத வர்களுக்கு எவ்வாறு இடைக்கால உதவியாக நிதி உதவி அளித்து வருகிறோம் என்ற இந்த விவரங்களையெல்லாம் நான் இவரை மதித்து எழுதியிருக்கிறேன்.

ஆனால் அவருக்கு இந்த பதில் மழுப்பலாக தெரிகிறதென்றால், அதற்காக காரணத்தை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டிலே உள்ள அத்தனை வேலை வாய்ப்பற்றவர்களுக்கும் ஒரே நாள் இரவில் வேலை வாய்ப்பு அளித்திட முடியாது. ஏதாவது திரைப்படங்களில் வேண்டுமானால் அப்படியொரு காட்சியினை வைக்கலாம். எந்த ஆட்சியிலும் படிப்படியாகத்தான் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

கேள்வி: கடந்த முப்பதாண்டில் ஒரு தடவையாவது ஏழை மக்களுக்காக சோறு போட்டிருக்கிறோம் என்று நிருபிக்கத் தயாரா என்று விஜயகாந்த் சவால் விடுகிறாரே?

பதில்: சபாஷ் இவரும் சவாலா. விசேஷ காலம் போல ஒரு தடவையல்ல, ஒவ்வொரு நாளும் ஏழை மக்கள் சோறு சாப்பிட வேண்டும் என்பதற்காக பதவிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ரூ.2க்கு ஒரு கிலோ அரிசி விற்கப்படும் என்று முதல் ஆணை நான் பிறப்பித்தேன். அந்த ஆணை பிறப்பித்த பிறகு உதாரணமாக தமிழ்நாட்டில் வேளாண்மை பணிகளுக்கு நாற்று நட மகளிர் கிடைப்பதில்லை என்ற ஒரு குறை உள்ளது.

ஏன் தெரியுமா, ஒரு பெண் இரண்டு நாள் வேலை செய்தால், அந்த மாதத்திற்கு தேவையான அரிசியை இவர் இரண்டு நாளில் தான் பெறுகின்ற கூலியிலிருந்து வாங்கி விட முடிகிறது. அந்த இரண்டு நாள் மட்டும் வேலை செய்து விட்டு பிறகு வேலைக்கே வர மறுக்கிறார்கள். பட்டினியாக அல்ல. இந்த நாட்டில் படிக்கும் குழந்தைகள் சத்துணவோடு சாப்பிட வேண்டும் என்பதற்காக வாரத்திற்கு 3 முறை முட்டைகள் வழங்க வேண்டுமென்று இரண்டாவது ஆணை பிறப்பித்தவனும் நான் தான்.

முதியோர் உதவித்தொகை பெறுவோரின் ஓய்வூதியத்தை தற்போது இரண்டு மடங்காக உயர்த்தியதோடு, அவர்களும் பட்டினியாக இருக்க கூடாதென்பதற்காக மதிய உணவு கூடங்களில் உணவருந்தலாம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்ததும் நான் தான். அவர்கள் சாப்பிட விரும்பாவிட்டால் மாதந்தோறும் 4 கிலோ அரிசியை இலவசமாக பெறலாம் என்றும் அறிவித்துள்ளேன்.

ஏன் பிறக்கப்போகும் குழந்தைகள் கூட பட்டினியால் இறக்க கூடாதென்பதற்காக கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.6,000 அரசின் சார்பில் நிதியுதவி அளிக்கின்ற செயலும் இந்த அரசின் சார்பில் நடைபெற்று வருதையும் தேமுதிக தலைவர் அறிவார் என்று கருதுகிறேன்.

எப்படியோ அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் மக்களிடம் மீண்டும் ஒரு முறை விளக்க விஜயகாந்த் அவர்களின் கேள்விப் பட்டியல் உதவிய வரையில் அவருக்கு நன்றி.

கேள்வி: பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசும்போது கடந்த வருடம் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை என்று கூறிய தமிழக முதல்வர் இப்போது மட்டும் எப்படி பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார் என்று கேட்டிருக்கிறாரே

பதில்: டெல்லியில் என்னை செய்தியாளர்கள் சந்தித்த போதும் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்த போதும் தெளிவாக விளக்கம் கூறியிருக்கிறோம். அதைப் படிக்காமல் இப்போது பொதுக்கூட்ட மேடையில் நின்று கொண்டு அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். நான் டெல்லி சென்றபோது பிரதமரைச் சந்தித்த நேரத்தில், பிரதமரே முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து மீண்டும் ஒருமுறை கேரள முதல்வருடன் பேசுங்களேன் எனக் கூறினார்.

உடனே நான், ஏற்கனவே பல முறை பேசப்பட்டும் எந்த விதமான பயனும் இல்லை, உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் பேச்சு வார்த்தையினால் என்ன பயன் விளையும் என்று கேட்டேன். அப்போது இந்தப் பிரச்சினையிலே மிகுந்த அக்கறையோடு உள்ள பிரதமர், பேசிப் பாருங்களேன் என்று மீண்டும் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பிறகும் அதை மறுப்பது நாகரிகமல்ல என்பதால் அந்தப் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டேன். நாகரீகமோ, பண்பாடோ இல்லாதவனாக நான் இருந்திருந்தால் முடியாது என்று ஒரேயடியாக மறுத்திருப்பேன்.

அப்படி பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் அணையில் நீர்க் கசிவு பற்றி தமிழகம், கேரளம் தவிர்த்த மற்ற மாநிலப் பொறியாளர்களைக் கொண்டு கணக்கிடலாம் என்ற கருத்தை தமிழகத்தின் சார்பில் என்னால் கூற முடிந்தது. கேரள முதல்வர் அந்தக் கருத்தை பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார். நம்மைப் பொறுத்தவரையில் பிரச்சினைதான் முக்கியமே தவிர, அண்டை மாநிலங்களோடு மோதி பிரச்சினையை வளர்த்துக் கொள்ள வேண்டு மென்பதல்ல என்பதையும் நான் அப்போதே தெளிவாக்கியிருக்கிறேன்.

கேள்வி: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின் வெட்டைத் தடுக்க ஏன் முன் கூட்டியே திட்டமிடவில்லை என்று அதே கூட்டத்தில் வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்: தமிழகத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க அவருடைய இன்றைய தோழமைக் கட்சியான ஜெயலலிதாவின் 5 ஆண்டு கால ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள் என்ன கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் போடப்பட்டுள்ள திட்டங்கள் என்னென்ன என்பதை அவர் அறிந்து கொண்டு இந்த கேள்வியைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒரு மின் திட்டத்தை தொடங்குவதால் அதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். அதனால் தான் தற்போது கழக ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ள மின் திட்டங்கள் பயனுக்கு வர இன்னும் 2,3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டிந்தால் தற்போது மின் வெட்டு வந்திருக்காது அப்போது எதையும் செய்யாமல் இருந்த காரணத்தினால் தான் இப்போது மின் வெட்டு தவிர்க்க முடியாமல் உள்ளது.

எனினும் இந்த நிலையையும் சமாளிக்க கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தலைமைச் செயலாளர் எரிசக்தித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மின்வாரியத் தலைவர் ஆகியோரைக் கொண்டு ஒரு குழு நியமித்து, அந்த குழு அன்றாடம் கலந்து பேசி மின்வெட்டினை சமாளிப்பதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறேன். அந்த குழுவும் அவ்வாறே பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகிறது.

நானும் டெல்லி சென்ற போது பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவரையும் மத்திய எரிசக்தி துறை அமைச்சரையும் சந்தித்து தமிழகத்திற்கு உடனடியாக மின்வெட்டு பிரச்சினையில் உதவிட வேண்டுமென் கேட்டுக் கொண்டேன். அவர்களும் நமது வேண்டுகோளை மதித்து நான் சென்னை திரும்புவத்குள்ளாகவே 300 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்து, அவ்வாறே வழங்கியிருக்கிறார்கள்.

கேள்வி: பகுத்தறிவு பற்றிப் பேசுகிறீர்களே, உங்கள் வீட்டில் சாய்பாபாவுக்கு என்ன வேலை என்றும் வைகோ கேட்டிருக்கிறாரே?

பதில்: என்னுடைய பகுத்தறிவு பற்றி இவரது சான்றிதழ் எனக்குத் தேவையில்லை. என்னை அறிந்தவர்கள் என் பகுத்தறிவு கொள்கை பற்றி அறிவார்கள். சாய்பாபாவின் வருகையினால் தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் என்ன லாபம் என்றுதான் இதில் பார்க்க வேண்டும். என் வீட்டிற்கு வந்ததால் சாய்பாபா நாத்திகராகி விடவில்லை. அவரது வருகை காரணமாக நானும் ஆத்திகனாகி விடவில்லை.

கேள்வி: அமைச்சர் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, எல்.கணேசன் ஆகியோர் விடுத்த அறிக்கைகள் எல்லாம் கலைஞரால் தயார் செய்யப்பட்டு அவர்கள் பெயரில் வெளியிடப்பட்டது என்று பாமகவைச் சேர்ந்த ஒருவர் பேசியிருக்கிறாரே?

பதில்: அவருடைய இந்தப் பேச்சு அவரது தலைவரால் தயார் செய்யப்பட்டு அதை இவர் பேசுகிறார் என்பது உண்மையானால், அவர் கூறியிருப்பதும் உண்மையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற