மறியல்: ஆயிரக்கணக்கான சிபிஎம் தொண்டர்கள் கைது
சென்னை: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இந்தப் போராட்டம் நடந்தது. கோவையில் போராட்டத்தில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளர் வரதராஜன் கைது செய்யப்பட்டார். மேலும், எம்.பிக்கள் மோகன், பெல்லார்மின், எம்.எல்.ஏக்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது. பிரசார இயக்கத்தின் நிறைவாக இன்று மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவையில் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் உட்பட 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பூக்கடை தொலைபேசி இணைப்பகம் முன்பாக நடைபெற்ற மறியலில் டி.கே.ரங்கராஜன், அம்பேத்கர் கல்லூரி அருகே நடைபெற்ற மறியலில் வி.மீனாட்சி சுந்தரம் உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மட்டும் மொத்தம் 12 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற கட்சியின் மதுரை எம்.பி மோகன், நாகர்கோவிலில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற எம்.பி பெல்லார்மின், எம்.எல்.ஏக்கள் லீமாரோஸ், ஜான் ஜோசப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
வேலூரில் சட்டமன்ற உறுப்பினர் லதா, நாகப்பட்டினத்தில் மாரிமுத்து, திருப்பூரில் கோவிந்தசாமி, திண்டுக்கல்லில் பாலபாரதி, மதுரையில் நன்மாறன் ஆகிய எம்எல்ஏக்கள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications
