'விஜய்காந்த் பயம்'- ஜெ. தொடங்கும் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: அதிமுகவில் புதிதாக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை என இரு பிரிவுகள் அமைக்கப்படுகின்றன.

இன்று நடந்த கட்சியின் செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்களில் தமிழகத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களில் இளைஞரணி கிளைகளை உருவாக்க வேண்டும் என்றும், அதிமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் வழக்கம்போல திமுக அரசை டிஸ்மிஸ் செய்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

அதிமுகவின் புதிய சட்டப்படி, ஆண்டுதோறும் ஒருமுறை செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி இக்கூட்டங்கள் சென்னை வானகரம், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அக் கூட்டத்தில் புதிய அவைத்தலைவராக இ.மதுசூதனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது பொன்னையனுக்கு நேரம் சரியில்லாததால் கட்சியில் ஓரம் கட்டப்பட்டிருந்தார். இதனால் அவர் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தற்போது ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் என்ற புதிய பதவியைப் பெற்றுள்ள பொன்னையன், இன்றைய செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தில் புதிய அந்தஸ்துடன் பங்கேற்றார்.

இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அதே வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மண்டபத்தில் தொடங்கியது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர்க்கொத்து வழங்கி ஜெயலலிதாவை வரவேற்றனர்.

அப்போது நூற்றுக்கணக்கான அதிமுக மூவண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. பின்னர் செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பின்னர் அகால மரணம், விபத்தில் இறந்த கட்சியினருக்கும், மறைந்த தலைவர்கள், சமுதாயத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

இக் கூட்டத்தில் முன்னிலை வகித்து பேசிய ஜெயலலிதா,

தமிழகத்தின் அனைத்து கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களில் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைகள் உருவாக்கப்பட வேண்டும். 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை கட்சியில் சேருங்கள்.

ஒரு கிளையில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், 2 இணைச் செயலாளர்கள், 2 துணைச் செயலாளர்கள், பொருளாளர் ஆகிய 9 நிர்வாகிகள் (ஜெயலலிதாவுக்கு ராசியான எண் 9) நியமிக்கப்படுவார்கள்.

ஒரு கிளையில் குறைந்தது 27 உறுப்பினர்கள் (2+7=9. கூட்டுத் தொகை 9 வந்துவிட்டது) இருக்க வேண்டும்.

இளைஞர் பாசறையில் அங்கத்தினர்களாக உள்ளவர்கள் 25 வயதுக்கு மேல் எம்.ஜி.ஆர். இளைஞர் அணியிலும், ஜெயலலிதா பேரவையிலும், நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும், இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இதே போல் குறைந்த பட்சம் 27 அங்கத்தினர்களை கொண்ட இளம் பெண்கள் பாசறை உருவாக்கப்படுகிறது.

இளம் பெண்கள் பாசறையில் அங்கத்தினர்களாக உள்ள பெண்கள் 25 வயதுக்கு மேல் மகளிர் அணியிலும் கட்சி நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி அங்கத்தினர்களுக்கு வயது உச்ச வரம்பு 35 என நிர்ணயிக்கப்படுகிறது. 35 வயதுக்கு மேல் அவர்கள் கழகத்தின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும், இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

ஜெயலலிதா பேரவை அங்கத்தினர்களுக்கு வயது உச்சவரம்பு 40 என நிர்ணயிக்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் அவர்கள் கட்சியின் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும், இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.

இது தொடர்பான சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

இதையடுத்து சட்ட திருத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்ட்டது.

இதையடுத்து 30 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு பலத்த கைத்தட்டலுடன் நிறைவேற்றப்பட்டன.

தீர்மான விவரம்:

- அனைத்துக் கிராமங்கள், வார்டுகள், வட்டங்களில், 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களைக் கொண்ட இளைஞர் பாசறையும், அதேபோல இளம் பெண்களைக் கொண்ட இளம் பெண்கள் பாசறையும் உருவாக்கப்படும். இந்த இரு பிரிவுகளிலும் தலா ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர், 2 துணைச் செயலாளர்கள், 2 பொதுச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் ஆகிய நிர்வாகிகள் இடம்பெறுவர்.

- எம்.ஜி.ஆர். புகழுக்கு மணிமகுடம் சூட்டும் வகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தலைமை தாங்கி நடத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவிக்கிறது. (எம்ஜிஆர் பெயருக்கு விஜய்காந்தும் உரிமை கோருவதால் இந்த ஸ்பெஷல் தீர்மானம்)

- இலவசம் என்ற பெயரில் தமிழக மக்களுக்குப் பாதகம் செய்தும், அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக தமிழகத்தை இருளில் தள்ளியும், காவிரி, முல்லைப் பெரியாறு அணை விவகாரங்களில் அக்கறை காட்டாத திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில், ராமர் பாலத்தை அழிக்கத் துடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- இந்தியாவின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலான மத்திய அரசின் அணு சக்தி கொள்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி தவறியது, கட்டுமானப் பொருட்களின் உயர்வு, மழை வெள்ள நிவாரணம் தராதது உள்ளிட்டவற்றுக்காக திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- தமிழகத்தில் நிலவும் உரத் தட்டுப்பாட்டை தீர்க்காதது, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.1000 வழங்காமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- கரும்பு விவசாயிகள் துன்பம் களைய முதன் முதலில் குரல் கொடுத்த ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

- கூட்டுறவு சங்க தேர்தலை சீர்குலைத்தது, மீனவர் துயரம் தீர்க்காதது ஆகியவற்றுக்காக திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிளஸ்டூவில் 60சதவீத மதிப்பெண்கள் பெற்றால்தான் அவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்குக் கண்டனம்.

- மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழக அரசின் கேபிள் டிவி சட்டத்தை விரைவில் கொண்டு வர வேண்டும்.

திமுக அரசை டிஸ்மிஸ் செய்யவும்:

- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையவும், தீவிரவாதத்தைத் தடுக்க தவறியதற்காகவும் திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். தமிழகத்தில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும்.

- ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்காத தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவருக்கு இரங்கல் கவிதை பாடிய கருணாநிதி மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

- புதுச்சேரி மக்களுக்காகப் போராடும் ஜெயலிலதாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது(!!!)

- தமிழை தேசிய ஆட்சி மொழியாகவும், திருக்குறளை தேசிய இலக்கியமாகவும் அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீர முழக்கமிட்ட ஜெ.வுக்கு பாராட்டு:

- சட்டசபையில் வீர முழக்கமிட்டு, வெற்றி நடை போட்ட ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது (!!).

- இலவச தரிசு நிலம் என போலியாக அறிவித்து பேசி மகிழும் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

- அண்ணா நூற்றாண்டு விழாவை அதிமுக சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்படுகிறது.

- கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

- ஜெயலலிதா தலைமையில், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி மலர பாடுபடுவோம்.

செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டங்களில், இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப் பினர்கள், 45 மாவட்டச் செயலாளர்கள், 60 எம்எல்ஏக்கள் மற்றும் ராஜ்ய சபா எம்.பி.க்கள், அதிமுகவின் பிரிவுத் தலைவர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலருக்கு சிறப்பு அழைப்பும் அனுப்பப்பட்டன. மொத்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன.

செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களையொட்டி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்தகரை முதல் வானகரம் வரையிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் சார்பாக வரவேற்பு வளைவுகளும், கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. வண்ண, வண்ண போஸ்டர்களும் பளிச்சிட்டன.

தமிழகத்து இளைஞர்களை விஜய்காந்த் மிக வேகமாக வசீகரித்து வரும் நிலையில் எப்போதும் இல்லாமல் முதல் முறையாக இளைஞரணி மாநாட்டை திமுக நடத்தியது.

அதில், கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இப்போது சரத்குமாரும் தன் பங்குக்குள் களத்தில் குதித்துள்ளதால் திடீரென அதிமுகவுக்கும் இளைஞர்கள் மீது கவனம் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்காந்தின் விசுவரூபத்தால் என்னென்ன மாற்றங்கள்...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+