Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'என்னை யார் கல்யாணம் செய்வார்கள்?': பாபிலோனா

Subscribe to Oneindia Tamil

கடத்தல் வழக்கில் கைதான தம்பியை விடுவிக்கக் கோரி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த நடிகை பாபிலோனா, புகார் கொடுப்பதற்கு முன்பாகவே நிருபர்களுக்கு பேட்டி கொடுத்து போலீஸாரின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி திரும்பினார்.

நடிகை பாபிலோனாவின் தம்பி பாலு. பாபிலோனாவின் சித்தி நடிகை மாயாவின் மகன் விக்கி என்கிற விக்னேஷ். விக்கி மீது ஏற்கனவே பெண் சப் இன்ஸ்பெக்டரை தாக்கியது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் கால் சென்டரில் வேலை பார்க்கும் ஷெல்டன் என்பவரை தாக்கி கடத்தியதாக புதிய வழக்கில் பாலுவும், விக்கியும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான பாலு உள்ளிட்ட 3 பேரை சமீபத்தில் போலீஸார் கைது செய்தனர். விக்கி தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்.

பாலு கைது செய்யப்பட்ட தகவல், ஹைதராபாத்தில் ஷூட்டிங்குக்காக போயிருந்த பாபிலோனாவுக்குத் தெரிய வந்ததும் அவர் பதறினார். அங்கிருந்தபடியே வடபழனி உதவி ஆணையரை போனில் தொடர்பு கொண்டு தனது தம்பியை அடித்து விட வேண்டாம் என கேட்டுக் கொண்டாராம். மேலும் விக்கியையும் சரணடையச் செய்வதாகவும் அவர் கூறினாராம்.

இந்த நிலையில் ஹைதராபாத்திலிருந்து அவசரமாக திரும்பிய பாபிலோனா நேற்று மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தார். அதில் போலீஸார் வேண்டும் என்றே தனது தம்பிகளைப் பழிவாங்குவதாகவும், பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் பல்டி அடித்துள்ளார்.

ஆணையரிடம் புகார் கொடுக்க வந்த அவர் புகார் கொடுப்பதற்கு முன்பு ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர்கள் அறைக்கு சென்று அரசியல்வாதிகள் ஸ்டைலில், டிவி கேமராக்கள், மைக்குகள் புடை சூழ பேட்டி கொடுக்க ஆரம்பித்தார்.

இதை அறிந்த போலீஸார் வேகமாக அங்கு வந்தனர். புகார் கொடுக்க வந்தால் புகார் கொடுத்த பிறகுதான் பேட்டி கொடுக்க வேண்டும். இப்படி புகார் மனுவில் உள்ளதே முன் கூட்டியே செய்தியாளர்களிடம் கூறுவது தவறு என்று பாபிலோனாவைக் கண்டித்தனர். பின்னர் அவரை அங்கிருந்து ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவைக் கொடுத்து விட்டுக் கிளம்பினார் பாபிலோனா.

இதுகுறித்து காவல்துறைத் தரப்பில் கூறுகையில், தனக்கு சற்றும் சம்பந்தமில்லாத வழக்கில் பாபிலோனா தேவையில்லாமல் தலையிடுவது இது 3வது முறையாகும். 3 முறையும் அவர் சம்பந்தமே இல்லாமல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இருப்பினும் மனித நேய அடிப்படையில் அவரது புகார்களை பெற்று உரியவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

ஆனால் புகார் கொடுக்க வந்தவர் புகார் மனுவைக் கொடுப்பதற்கு முன்பாகவே பேட்டி கொடுத்திருக்கிறார். இது தவறான செயல்.

ஆணையர் அலுவலக செய்தியாளர் அறையில் தனி நபர் யாரும் பேட்டி கொடுக்க அனுமதி கிடையாது. காவல்துறையினர் மட்டுமே பேட்டி கொடுக்க அனுமதி உண்டு. ஆனால் அதை மீறி பேட்டி கொடுத்துள்ளார் பாபிலோனா. எனவேதான் அவரைக் கண்டித்து எச்சரித்தோம்.

இந்தப் புகாரையும் உரியவர்களிடம் அனுப்பி வைத்துள்ளோம். அவர் புகாரில் கூறியுள்ளவை உண்மை இல்ைல என்று தெரிய வந்தால் அவர் மீது கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என்றார் அந்த அதிகாரி.

முன்னாக செய்தியாளர்களிடம் பாபிலோனா பேசுகையில், அண்ணாநகரில் உள்ள ஸ்நூக்கர் விளையாட்டு மையத்தில் எனது தம்பிக்கும், பிரகாஷ் நியூட்டன், அவரது நண்பர் ஷெல்டன் ஆகியோருக்கிடையே சிறு தகராறு ஏற்பட்டு பின்னர் சமாதானம் ஆகிவிட்டனர்.

பின்னர் நெசப்பாக்கம் கோயிலுக்கு சென்று விட்டு வந்த என்னுடைய தம்பியை வழி மறித்து நியூட்டன், ஷெல்டன் உள்ளிட்டோர் தகராறு செய்துள்ளனர்.

என்னுடைய தம்பியை அவர்கள் தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ஒன்றரை சவரன் நகையையும் பறித்துச் சென்று விட்டனர். இது குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று அதன் பின்னர் அவர்கள் வீட்டுக்கு வந்துவிட்ட என்னுடைய தம்பியிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக என்னுடைய தம்பி மீது போலீசில் புகார் செய்து விட்டனர். இந்த புகாரை போலீசாரும் சரியாக விசாரிக்காமல் என்னுடைய தம்பி மீது பொய் வழக்கு போட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

என்னுடைய சித்தி மகன் விக்கி மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் கேரளாவில் பணி புரிந்து வருகிறார். என்னுடைய தம்பி யாரையும் கடத்தவில்லை. இந்த வழக்கில் என் தம்பிகளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். என்னுடைய தம்பியை தாக்கியவர்கள் மீதும், அவர் மீது பொய்யான புகார் தெரிவித்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் பாபிலோனா கேட்டுக் கொண்டுள்ளாராம்.

'என் கல்யாணம் பாதிக்குமே ..':

இந் நிலையில் இன்று பாபிலோனா சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போலீஸாரின் கடுமையான நடவடிக்கையால் எனது திரையுலக வாழ்க்கையே பாதித்துள்ளது. என்னைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இப்படி செய்தால் என்னை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று புலம்பினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது தம்பி பாலுவை கடத்தல் வழக்கு ஒன்றில் தேவையில்லாமல் போலீசார் கைது செய்துள்ளனர். ஷெல்டன் என்பவர் கடத்தப்பட்டதாக பிரகாஷ் என்பவர் மேல்தான் முதலில் புகார் கூறப்பட்டது. முக்கிய பிரமுகர் ஒருவரின் மகன் என்பதால் பிரகாசை போலீசார் கைது செய்யவில்லை. ஆனால் பிரகாசின் நண்பனான எனது தம்பியை மட்டும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

இதுபற்றி எதுவும் பேசாமல் இருந்தால் எங்கள் பக்கம்தான் தவறு என்று கருதி விடுவார்களே என்று நினைத்து அதற்காக நியாயம் கேட்டு கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று சென்றேன்.

ஆனால் கமிஷனர் அலுவலகத்தில் இருந்த மக்கள் தொடர்பு அதிகாரி தேவை இல்லாமல் சீப்பான பப்ளிசிட்டிக்காக நீங்கள் அடிக்கடி இங்கு வருகிறீர்கள் என்று என்னிடம் கடுமையான வார்த்தைகளால் பேசினார்.

'நடிகைன்னா 4 பேர் கூடத்தான் செய்வார்கள் ..':

நடிகை ஒருவர் ஒரு இடத்திற்கு சென்றால் அவரை பார்ப்பதற்காக நான்கு பேர் கூடத்தான் செய்வார்கள். நான்கு சுவர்களுக்குள் பேசி முடித்திருக்க வேண்டிய எனது தம்பி பிரச்சினையை போலீசார் ஊதி பெரிதாக்கியதால் தான் என் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துச் சொல்லவே போலீஸ் கமிஷனர் அலு வலகம் சென்றேன்.

அங்கு என்னிடம் கொஞ்சம் தாழ்மையுடன் பேசி இருக்கலாம். ஆனால் நான் அத்து மீறி நுழைந்து விட்டதாகவும் ரவுடித்தனத்தில் ஈடுபடுவதாகவும் என்னை பற்றி தவறான தகவல்களை கிளப்பி விட்டு விட்டார்கள். நான் அப்படிப்பட்ட பெண் அல்ல.

'என்னை யார் கல்யாணம் செய்வார்கள்?':

போலீசாரின் இது போன்ற நடவடிக்கைகளால் எனது சினிமா வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நான் படப்பிடிப்பை கூட ரத்து செய்து விட்டுத் இங்கு வந்துள்ளேன். என்னை பற்றி இது போன்ற தகவல்களை பரப்பினால் என்னை யாரும் திருமணம் செய்து கொள்ள முன் வரமாட்டார்கள்.

பிரகாசின் தந்தை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருவதால் போலீசார் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளனர். என் தம்பி மீது புகார் கொடுத்தவர்கள் வளசரவாக்கம் பகுதியில் கூலிப்படையினர் போல செயல் பட்டு வருகிறார்கள். இந்த வழக்கில் தேவையில்லாமல் எனது இன்னொரு தம்பி விக்கியையும் (மாயா மகன்) தேடுவதாக போலீசார் கூறியுள்ளனர்.

ஆனால் விக்கி சென்னையிலேய இல்லை. அவன் கேரளா போய் 7 மாதங்களாகிறது. அவனுக்கு கல்யாண ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். இப்போது போலீஸார் எடுத்துள்ள நடவடிக்கையால், அவனது கல்யாண வாழ்க்கை பாதிக்கப்படும்.

என் தம்பிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளுக்காக நியாயம் கேட்க கமிஷனர் அலுவலகம் சென்றது தவறா? வேறு யாரிடம் சென்று நான் நியாயம் கேட்பேன்?.

'எலி ஹெலிகாப்டர் ஓட்டுமாம்..':

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கமாட்டார் என்று சொல்வார்கள். அதேபோல, கேட்கிறவன் கேனையாக இருந்தால் எலி கூட ஹெலிகாப்டர் ஒட்டியதாக கூறுவார்கள்.

நேற்று கமிஷனர் அலுவலகம் சென்ற எனக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டு விட்டது.

நான் எப்படியும் 2 நாட்களில் நிச்சயம் கமிஷனரை சென்று சந்திப்பேன். அப்போது எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை அவரிடம் எடுத்துக் கூறுவேன்.

'அழுகையே வந்துடுச்சு ..':

நேற்று நான் கமிஷனர் அலுவலகம் சென்ற போது அங்குள்ள மக்கள் தொடர்பு அதிகாரி கூறிய வார்த்தைகளால் எனக்கு அழுகையே வந்து விட்டது. கமிஷனர் மிகவும் நல்லவர். அனைவரது பிரச்சினைகளையும் கேட்டு தீர்த்து வைப்பவர். நேற்று அவர் மட்டும் அங்கு இருந்திருந்தால் இந்த அளவுக்கு நடந்து இருக்காது. நிச்சயம் எனது தரப்பு நியாயத்தை அவர் கேட்டிருப்பார்.

ஏதோ எனது தம்பி கொலை செய்து விட்டது போலவும், கற்பழிப்பு வழக்கில் சிக்கியது போலவும் விசாரணையின்றி அவர் மீது வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார் அவர்.

தொடர்ந்து அவர் கூறுகையில், சின்ன விஷயங்களுக்கு கூட எனது தம்பி களின் பெயரை போலீசார் இழுப்பது ஏன் என்றுதான் எனக்கு தெரியவில்லை.

என் தம்பி மீது நடவடிக்கை எடுக்க முக்கிய பிரமுகர் ஒருவரே காரணம். அவரது பெயர் எனக்குத் தெரியாது. ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர்தான் காரணம் என்றார் பாபிலோனா.

பாபிலோனா தம்பி கைது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+