ராமதாஸ் அதிமுக கூட்டணிக்கு வருவார்-நாஞ்சில்
காஞ்சிபுரம்: பாமக தலைவர் ராமதாஸ் விரைவில் எங்கள் கூட்டணிக்கு (அதிமுக) வருவார் என மதிமுக கொள்ளை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
மதிமுகவின் 15ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில் பேசிய சம்பத்,
எங்களை அழிக்க எத்தனையோ சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. திமுக அரசும், சிங்கள அரசும் இணைந்து மதிமுகவை முடக்க நினைக்கின்றன. மதிமுகவின் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்வதை தவிர எந்த பாவத்தையும் நான் செய்யவில்லை.
என்னை குறிவைத்து தாக்குகிறீர்களே நான் என்ன பாவம் செய்தேன். ஆயிரம் இடிகள் என் தலையில் இறங்கினாலும் வைகோவை விடமாட்டேன். நான் தாக்கப்பட்டதற்காக கவலைப்படவில்லை. மரணத்தின் வாயிலை சந்தித்து வந்திருக்கிறேன்.
மதுரை சிறைச் சாலையில் தாக்கப்பட்டேன். அக்டோபர் 26ம் தேதி தாக்கப்பட்டேன். இதை மரண வாக்குமூலமாக சொல்லிக் கொள்கிறேன்.
செஞ்சி ராமச்சந்திரனையும், எல்.கணேசனையும் விலைக்கு வாங்கிவிட்டால் இந்த இயக்கம் காணாமல் போய்விடும் என்று திட்டமிட்டீர்கள். எங்கள் இயக்கத்தின் ஒரு கல்லைக்கூட எடுக்க முடியாது.
நான் வேறு கட்சிக்குப் போய் இருந்தால் இந்நேரம் எங்கோ போய் இருப்பேன். நான் அரசியலில் 'அன் ரிசர்வ்டு டிக்கட்டில்' பயணம் செய்பவன்.
ராமதாஸ் எங்கள் கூட்டணிக்கு வர போகிறார். அவர் இங்கே வரப்போகிறார் என்றால் எங்கள் அணி ஜெயிக்கப் போகிறது என்று அர்த்தம் என்றார் நாஞ்சில் சம்பத்.
கரூரில் மதிமுகவினர் கைது!:
இதற்கிடையே குளித்தலையில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டத்தில் திமுகவினர் நடத்திய தாக்குதல் தொடர்பாக 4 மதிமுகவினரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ மாணிக்கம் உள்ளிட்டோர் மீது போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில், மதிமுகவைச் சேர்ந்த குளித்தலை நகர இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் மோகன், வார்டு செயலாளர்கள் பன்னீர், மோகன்குமார், டி.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முத்துச் செல்வம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மதிமுகவினர் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் தனது காரை மதிமுகவினர் அடித்து நொறுக்கியதாக அவர் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நான்கு மதிமுகவினரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைதுக்கு கரூர் மாவட்ட மதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். இல்லாவிட்டால் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று மதிமுக தெரிவித்துள்ளது.