வாடகை பெற்றோர்: சகோதரியாக கள்ளக் காதலி-மனைவி கொலை- தப்பியோடிய 'திடுக்' வாலிபர்
சென்னை: வாடகைக்கு தாய், தந்தை, சகோதரிகளை அமர்த்தி மாமனார் வீட்டை ஏமாற்றி கல்யாணம் செய்த வாலிபர் மனைவியைக் கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் வாடகை சகோதரியாக நடித்த பெண் அவரது கள்ளக் காதலியாவார்.
சிதம்பரத்தை சேர்ந்தவர் சுந்தரம் (30). சிறு வயதிலேயே வீட்டை விட்டு சென்னைக்கு ஓடி வந்துவிட்டவர். தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பெற்றோர், உறவினர்கள் என யாருடனும் இவருக்கு இப்போது தொடர்பில்லை.
இந் நிலையில், சுந்தரம் திருமணம் செய்ய விரும்பினார். அவருக்கு சென்னை ஐஸ்ஹவுஸை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது மகளை திருமணம் செய்து வைக்க முன் வந்தார். பெற்றோர், உறவினர்களுடன் வந்து பெண் பார்க்க வருமாறு ஆறுமுகம் கூறினார்.
ஆனால், தனக்கு யாரும் இல்லை என்று சொன்னால் பெண் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்த சுந்தரம் ஒரு நாடகம் போட்டார். சினிமாவில் வருவது மாதிரி அருள் என்பவரை தனக்கு தந்தையாகவும், அவரது மனைவியை தாயாகவும் நடிக்க வைத்தார். இந்த அருள் சுந்தரத்துடன் வேலை பார்ப்பவர் ஆவார்.
மேலும் தனது அக்காள்களாக மடிப்பாக்கத்தில் தனது வீட்டின் அருகே வசிக்கும் ராணி, குயிலா, கஸ்தூரி ஆகியோரை நடிக்க வைத்தார்.
அவர்களும் சுந்தரம் தந்த பணத்தை வாங்கிக் கொண்டு சொன்னது போல நடித்தார்கள். இதை நம்பி ஆறுமுகம் தனது மகள் வேல்விழியை கடந்த மே மாதம் திருமணம் செய்து வைத்தார்.
இந் நிலையில், வரதட்சணை கேட்டு வேல்விழியை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தார் சுந்தரம். இதனால் வேல்விழி கடந்த செப்டம்பர் மாதம் தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் சமாதானம் செய்து வேல்விழியை அழைத்துச் சென்றார் சுந்தரம்.
இந் நிலையில் கடந்த சில தினங்களாக திடீரென சுந்தரத்தையும், வேல்விழியையும் காணவில்லை. அவர்கள் வசித்த வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து வேல்விழியின் தந்தை ஆறுமுகம் சுந்தரத்தின் தந்தையாக நடித்த அருள், அக்காள்களாக நடித்த ராணி, குயிலா, கஸ்தூரி ஆகியோரை சந்தித்து விசாரித்தார்.
அப்போது தான் அவர்கள் பணத்துக்கு நடித்த பெற்றோர்-சகோதரிகள் என்று தெரியவந்தது. மேலும் வேல்விழி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சுந்தரத்தின் அக்கம் பக்கத்து வீட்டினர் தெரிவித்தனர்.
அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரைப் பார்த்து ஆச்சரியமடைந்த துணை கமிஷனர் மெளரியா இது குறித்து விசாரிக்க உதவி கமிஷனர் ரவீந்திரன், ஐஸ்ஹவுஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
போலீசார் தனிப் படை அமைத்து சுந்தரத்தின் தந்தையாக நடித்த அருளிடம் விசாரித்தனர். அப்போது சில நாட்களாக சுந்தரம் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது.
சுந்தரத்தின் அக்காள்களாக வேடம் போட்ட ராணி, குயிலா, கஸ்தூரி ஆகியோரிடம் விசாரித்தபோது போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. ராணியும், குயிலாவும் சகோதரிகள். இதில் ராணி, சுந்தரத்துடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பவர் என்று தெரியவந்தது.
சுந்தரத்தின் அண்டை வீட்டில் வசிப்பவரான கஸ்தூரி சுந்தரத்திற்கு ரூ.75,000 கடன் கொடுத்துள்ளாராம். தன் கடன் தொகையை வசூலிப்பதற்காக சுந்தரத்தின் அக்காளாக வேடம் போட்டதாகக் கூறியுள்ளார். (வரதட்சணை வாங்கி கடனை அடைப்பதாக சுந்தரம் கூறியுள்ளார்)
ராணியிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, வேல்விழியை கொலை செய்து பிணத்தை புதரில் வீசிவிட்டதாக சுந்தரம் தன்னிடம் கூறியதாகவும், அதன்பிறகு சுந்தரம் தலைமறைவாகிவிட்டார் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சுந்தரத்தை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வேல்விழி உண்மையிலேேய கொலை செய்யப்பட்டுவிட்டாரா, அல்லது எங்கேயாவது மறைத்து வைக்கப்பட்டுள்ளாரா என்பது சுந்தரம் பிடிபட்டால் தான் தெரியும்.
சிதம்பரத்தில் வசிக்கும் சுந்தரத்தின் உண்மையான தாய், தந்தையிடம் போலீசார் விசாரித்தபோது அவர்களும் நடந்த கதையைக் கேட்டு அதிர்ச்சியடந்துள்ளனர்.
இந் நிலையில் தந்தையாக நடித்த அருள், அக்காள்களாக நடித்த ராணி, குயிலா, கஸ்தூரி ஆகிய 4 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ஆள் மாறாட்டம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications