India
  • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயகாந்த்தை விரட்டுவோம் - பாமக, வி.சி. ஆவேச கூட்டறிக்கை

By Staff
Google Oneindia Tamil News
Vijayakanth
சென்னை: அரசியலிலிருந்து விஜயகாந்த்தை விரட்டாமல் விட மாட்டோம் என பாமக தலைவர் ஜி.கே.மணியும், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவனும் ஆவேசமாக கூறியுள்ளார்.

தேமுதிகவின் வளர்ச்சியைக் கண்டும், விஜயகாந்த்துக்கு பெருகி வரும் ஆதரவைக் கண்டும் தமிழக அரசியல் கட்சிகள் பயப்பட ஆரம்பித்து ரொம்ப நாளாகி விட்டது. ஆனால் சமீப காலமாக விஜயகாந்த்தைக் குறி வைத்து முக்கியக் கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகின்றன.

ஆரம்பத்தில் திமுகவும், பின்னர் அதிமுகவும், தொடர்ந்து பாமகவும், இப்போது விடுதலைச் சிறுத்தைகளும் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்துப் பேச ஆரம்பித்துள்ளன.

முதல்வர் கருணாநிதி முன்பு சட்டசபையில் பேசியது தொடர்பாக குமுதம் இதழுக்கு விஜயகாந்த் அளித்தப் பேட்டியைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த்துக்கு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இரட்டைக் குழல் துப்பாக்கியாக, பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்து கூட்டாக அறிக்கை விட்டுள்ளன.

இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைப்படங்களில் காரசாரமாகப் பேசிக் கொண்டிருக்கும் நடிகர் ஒருவர், தமிழக அரசியலுக்குப் புதிய அரிச்சுவடி எழுதப் போகிறேன் என்று புறப்பட்டிருக்கிறார்.

இந்தப் பகுதி நேர அரசியல்வாதி பாமகவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியையும் சீண்டிப் பார்த்திருக்கிறார். சாதிக் கட்சிகள் என்றும், அவற்றுடன் கூட்டணி இல்லை என்றும் வசனம்' பேசியிருக்கிறார்.

இவருக்கு முன்னால் கட்சிகள் எல்லாம் வரிசையில் நின்று தவம் கிடப்பதைப் போல வாய் நீளம் காட்டியிருக்கிறார்.

உயிர்த் தியாகம், ஓய்வில்லாத உழைப்பு, ஈடு இணையற்ற இன உணர்வு, அளவிட முடியாத மக்கள் ஈடுபாடு ஆகியவற்றை உரமாகக் கொண்டு ஓங்கி வளர்ந்து நிற்கும் இயக்கங்கள் தான் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்.

இந்த நடிகருக்கு, இவையெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. அரசியல் நாகரிகம் என்றால், பண்பாடு என்றால், பணிவு என்றால் என்னவென்று கேட்கும் ஒரு நபரிடம் இதை எதிர்பார்க்கவும் முடியாது.

நாங்கள் ஜாதிக் கட்சிகளா?:

பல தேர்தல்களைச் சந்தித்து மக்களின் ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற்ற எங்களைப் பார்த்து சாதிக் கட்சி என்கிறார்.

ஆனால், அவர் கட்சியைத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாக அவருடைய போக்குப் பிடிக்காமலும், அவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற சக்தி'களின் நடவடிக்கைகள் பிடிக்காமலும் அவரது கட்சியிலிருந்து வெளியேறிச் சென்றவர்களிடம் கேட்டால், அங்கே என்ன நடக்கிறது? எது ஆட்டிப் படைக்கிறது? எந்த அடிப்படையில் அங்கே கட்சியில் பதவி அளிக்கப்படுகிறது? என்று கேட்டால் அவர்கள் எல்லோரும் கதை கதையாகச் சொல்கிறார்கள்.

சாதி அரசியல் என்று பேசி, ஏதோ எல்லோருக்கும் மேலானவர் என்பது போல நாடகம் ஆடுகிற இந்த நடிகருக்குப் பாமக தோன்றிய வரலாறும், அதன் தியாகமும் தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகளின் அரசியல் பிரவேசத்தின் மகத்துவம் புரியுமா?.

சாதிகள் ஒழிய வேண்டும், தமிழகத்தில் சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவதுதான் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு.

ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக் கீற்றாகத் தமிழக அரசியல் வானில் உதித்திருக்கும் இயக்கங்கள்தான் இவை. போராட்டக் களங்களைச் சந்தித்து, உயிர்த் தியாகங்களைச் செய்து வளர்ந்துள்ள கட்சிகள்.

எங்களால் 107 ஜாதிகளுக்குப் பலன்:

இட ஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தப்பட்டது என்றால், அதனால் பலனடைந்திருப்பது குறிப்பிட்ட ஒரு சாதி மட்டுமல்ல, ஏறக்குறைய 107 சாதிகள் பலனடைந்திருக்கின்றன.

ஆண்டாண்டுக் காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த இந்த சாதிகள் இன்று பலனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் அதிகாரம், பொருளாதார முன்னேற்றம் பெற்றிருக்கின்றன.

உலகத் தமிழர்களின் அடையாளம் அழிந்து போகாமல் தடுக்கவும், உள்ளூர்த் தமிழர்களின் உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்கும் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றின் வளர்ச்சியையும், செல்வாக்கையும் கண்டு பொறுக்க முடியாத ஆதிக்கச் சத்திகள் கடந்த காலங்களில் சாதி' எனும் முத்திரை குத்தி தோற்றுப் போயிருக்கின்றன.

விஜயகாந்த் வலையில் தமிழகம் சிக்காது:

அந்த ஆதிக்கச் சக்திகளின் வழியில் இப்போது இந்த நடிகரும் எங்களுக்கு எதிராக அட்டைக் கத்தியைச் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார். தெளிவான சிந்தனையோடு உள்ள தமிழக மக்களைத் திசை திருப்பி, குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் நடிகரின் வலையில் இனி ஒரு போதும் தமிழகம் சிக்காது.

திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமே அரசியலுக்கான தகுதி என்று நினைத்துச் செயல்படும் இவர், தமிழகத்தின் பல்வேறு சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்காக இதுவரையில் ஒரு சிறிய துரும்பையாவது எடுத்துப் போட்டிருப்பாரா?

மொழிக் கொள்கையில் இவரது நிலைப்பாடு என்ன? மாநிலத்தின் மக்களுக்காகவும், அவர்கள் உயிரென மதிக்கும் தமிழ் மொழிக்காகவும், அவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்காகவும் இதுவரையில் இந்த நடிகர் எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

இவரது பெயரிலும், இவரை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சக்திகளின் பெயரிலும் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது என்றும், ஆனாலும், 5 ஆண்டுகளுக்கு மேல் வருமான வரித்துறைக்கு கணக்கே காட்டவில்லை என்றும், வருமான வரித்துறையினரால் குற்றம் சுமத்தப்பட்டு வீடுகளிலும், நிறுவனங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்ட வரலாற்றை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

வாலாட்டினால் அடையாளம் காட்டுவோம்:

நடிப்பதற்காக வெள்ளையில் வாங்கியது எவ்வளவு, கறுப்பில் வாங்கியது எவ்வளவு? அப்படி வாங்கி குவித்த பணம் எங்கெங்கு, யார் யார்? பெயரில் முதலீடு செய்யப்பட்டு பல்வேறு கல்லூரிகளாகவும், நிறுவனங்களாகவும் மாறியிருக்கின்றன என்ற கணக்கெல்லாம் எங்களிடம் இருக்கிறது.

எங்களிடம் வாலாட்டினால் அவற்றையெல்லாம் வெளியிட்டு மக்களுக்கு அடையாளம் காட்டிவிடுவோம் என்று எச்சரிக்கிறோம்.

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டு, வேலி அடைத்துக் கொண்ட வரலாறும், விழிப்புற்ற தமிழக மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.

எதேச்சையாக விமான நிலையத்தில் நடந்துவிட்ட ஒரு சந்திப்பை (காங்கிரஸ் பார்வாளர் அருண்குமாருடனான சந்திப்பு) சாதகமாகக் கொண்டு மனக்கோட்டை கட்டி மகாராஜா போலப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

எங்களுடன் கூட்டணி இல்லை என்று சொல்வதற்கு இந்த நடிகர் யார்? இதைச் சொல்ல ஒரு தகுதி வேண்டாமா? நாங்கள் சொல்லுகிறோம்; எங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் தகுதி இந்த நடிகருக்கும் இல்லை. அவரது கட்சிக்கும் இல்லை.

விரட்டாமல் ஓய மாட்டோம்:

பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் போயும், போயும் ஒரு நடிகருடன், அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோமா? அந்தத் தவறை நிச்சயம் நாங்கள் செய்யவே மாட்டோம்.

அரசியலிலிருந்து அரிதாரம் பூசிய இத்தகைய போலிகளை உற்ற தோழர்களின் உதவியோடு விரட்டியடிப்போம், அதுவரை ஓயமாட்டோம் என்று அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X