ஆட்சியை கைப்பற்றுவோம்-டாக்டர் கிருஷ்ணசாமி!
மதுரை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் என புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாட்டில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடும், 10ம் ஆண்டு துவக்க விழாவும் மதுரையில் நடந்தது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவி சந்திரிகா கொடியேற்றி வைத்தார்.
பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவே ஒரு கட்சி உருவாக்கப்பட்டது என்றால் அது புதிய தமிழகம் கட்சி தான்.
இந்த கட்சி மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக ஒயாமல் போராடி வருகிறது. இந்த கட்சியை வளர விடக்கூடாது, தடை செய்ய வேண்டும் என்று சிலர் சதி செய்தனர். அது எடுபடவில்லை. அதை எல்லாம் மீறி இன்று 10ம் வருடத்தில் வீறுகொண்டு எழுந்துள்ளது.
புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தியதால் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது நடந்துள்ள கொடுமைகள் குறைந்துள்ளது. மதமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த கட்சி எது வென்றால் அது புதிய தமிழகம் தான்.
வரும் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தலைமையில் தான் மாற்று அணி உருவாகும். அந்த அணி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அணியாக இருக்கும் என படு நம்பிக்கையுடன் பேசினார்.
இதில் கவிஞர் இன்குலாப், கவிதாச்சரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications
