
சிறையில் ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் உண்ணாவிரதம்

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்தக் கோவில் தீக்சிதர்கள் எனப்படும் கோவில் பரம்பரை அர்ச்சகர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்குள்ள கனகசபை எனப்படும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருமறை ஆகியவை முன்பு பாடப்பட்டு வந்தது. ஆனால் தீக்சிதர்கள் இதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடை போட்டு வந்தனர்.
அவர்களை மீறி யாராவது பாட முயன்றால் அடி, உதை கிடைக்கும். திருச்சிற்றம்பல மேடை என்றில்லாமல் கோவிலுக்குள் எங்குமே தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதை எதிர்த்து சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டோர் போராடி வந்தனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி அரை மணி நேரத்திற்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என்று ஏற்கனவே அறிவித்த தனது உத்தரவை இந்து அறநிலையத்துறை மீண்டும் உறுதி செய்து அறிவித்தது.
இதையடுத்து நேற்று முன்தினம், ஆறுமுகச்சாமி ஓதுவார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடச் சென்றனர். ஆனால் அவர்களை பாட அனுமதிக்காமல் தீக்சிதர்கள் தாக்குதலில் இறங்கினர். இதில் ஆறுமுகச்சாமி தாக்கப்பட்டார்.
இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தாக்கினர். கடலூர் மாவட்ட எஸ்.பிக்கும் அடி விழுந்தது. இதையடுத்து தாக்குதல் நடத்திய தீக்சிதர்களை போலீஸார் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர்.
மேலும் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 12 தீக்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 11 பேர் வளைத்துப் பிடித்துக் கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் அன்று மாலை ஆறுமுகச்சாமி தலைமையில் மீண்டும் சிவனடியார்கள் தேவாரம் பாட வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்தனர். அதையும் மீறி அவர்கள் செல்ல முயன்றபோது ஆறுமுகச்சாமி உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை புதுக்கோட்டையில் உள்ள சிறார் பள்ளிக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மற்ற 33 பேரையும் கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அடைத்தனர்.
இன்று காலை முதல் 33 பேரும் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.
சிதம்பரத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுவதால், நடராஜர் கோவில் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.