For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15ம் தேதி வரை திமுகவுக்கு ராமதாஸ் கெடு

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss
சென்னை: பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தருவது குறித்து மார்ச் 15ம் தேதிக்குள் திமுக தனது மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டல் அன்றைய தினம் இறுதி முடிவை பாமக அறிவிக்கும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

தமிழத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற 26ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களிலும், அதிமுகவுக்கு ஒரு இடமும் கிடைக்க வாய்ப்புள்ளது. 6வது இடத்திற்கு இரு கூட்டணிகளிலும் போதுமான பலம் இல்லை.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

ஆனால் பாமகவுக்கு ஒரு சீட் கொடுத்தே ஆக வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் இந்தக் கோரிக்கையை முதல்வர் கருணாநிதி நிராகரித்து விட்டார்.

இந் நிலையில் இன்று தி.நகர் பென்ஸ் பார்க் ஹோட்டலில் பாமக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், மாநிலத் துணைச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ராமதாஸ் தீவிர ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறுகையில்,

பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவது தொடர்பாக திமுக தலைமையுடன் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மார்ச் 15ம் தேதி வரை இந்த பேச்சுவார்த்தைகளை தொடர முடிவு செய்துள்ளோம்.

அதற்குள் திமுக தனது நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஓட்டளிக்காமல் புறக்கணிப்பு:

திமுக நமக்கு சீட் ஒதுக்காவிட்டால், தேர்தலில் ஓட்டளிக்காமல் புறக்கணிக்க வேண்டும் எனவும் இன்றைய கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், இறுதியில், திமுகவுடன் இந்த விவகாரத்தை சுமூகமாக தீர்த்துக் கொள்வது குறித்து தொடர்ந்து பேச தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக கூட்டணியில் நாங்கள் 3வது பெரிய கட்சி. காங்கிரஸ் கட்சிக்கு 35 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என்றால் எங்களிடம் 18 பேர் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கொடுக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எங்களுக்கும் ஒரு இடம் கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இதில் தவறு என்ன இருக்கிறது.

மார்ச் 15ம் தேதியன்று தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். அதற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். ஒருவேளை எங்களுக்கு சாதகமாக முடிவு வராவிட்டால், என்ன முடிவு எடுப்போம் என்பதை இப்போது கூற முடியாது. அதை 15ம் தேதி உங்களிடம் கூறுகிறேன்.

பாமகவுக்கு அநீதி:

ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியைப் போக்க வேண்டியது கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பொறுப்பாகும்.

கூட்டணி தர்மத்தை வலியுறுத்தி பேசும் திமுக தலைவர் இந்த அநீதியைப் போக்க முயல வேண்டும். பாமகவை திமுக புறக்கணிக்கவில்லை என்று அவர் கூறுவது உண்மையானால் இதை அவர் செய்ய வேண்டும்.

கருணாநிதியை சந்தி்க்க மாட்டேன்:

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்கும் திட்டம் என்னிடம் இல்லை. கட்சித் தலைவர் ஜி.கே.மணி இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வார்.

காங்கிரஸ் கட்சிக்கு 2 சீட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு சீட்டும் தருவதில் பாமகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் எங்களுக்கு ஒரு சீட் தந்தே ஆக வேண்டும்.

ஆளும் திமுக, அமைச்சர் பதவிகளையும், பல்வேறு வாரியத் தலைவர் பதவிகளையும் தன் வசம் வைத்துள்ளது. எனவே தனக்குள்ள இரண்டு சீட்களில் ஒரு சீட்டை பாமகவுக்கு ஒதுக்கித் தர முன் வர வேண்டும்.

2006ம் ஆண்டு, மே மாதம் சிறுபான்மை பலத்துடன் திமுக ஆட்சி அமைத்தபோது, எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரவு தந்து, தொடர்ந்து ஆதரவை தொடர்ந்து கொண்டிருக்கும் பாமகவுக்கு திமுக காட்டும் நீதியாக இது அமையும்.

2004ம் ஆண்டு பாமகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்பட்டு விட்டது. எனவே இப்போது சீட் தர முடியாது, எங்களுக்கு 2, காங்கிரஸுக்கு 2, கம்யூனிஸ்ட்டுக்கு ஒன்று. 2010ம் ஆண்டு வரை பாமக காத்திருக்க வேண்டும் என்று கருணாநிதி தன்னிச்சையாக கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இப்படி அவர் கூறியிருப்பதைப் பார்த்தால் 2010ம் ஆண்டு வரை பாமகவுக்கு கூடுதலாக ஒரு சீட் கூட கிடையாது என்று கூறுவதைப் போல உள்ளது. இது முற்றிலும் அநீதியானது, நியாயமற்றது.

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி திமுக, பாமகவுக்கு 6 லோக் சபா சீட்களை ஒதுக்கியது. ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கியது. அந்த ஒப்பந்தம் 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலோடு முடிந்து விட்டது.

'பெரியண்ணன்' மனப்பான்மை:

சட்டசபையில் பாமகவின் எம்.எல்.ஏக்கள் பலம் 18 ஆக உள்ளது. இந்த பலத்தை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்கீடு அமைய வேண்டும்.

கடந்த ஆண்டு நடந்த ராஜ்யசபா தேர்தலின்போது திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ், சிபிஐ தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அப்போது பாமக சீட் எதையும் கேட்கவில்லை.

இந்த முறை பாமகவுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்கிறோம். இதில் என்ன தவறு உள்ளது.

முதல்வர் கருணாநிதியை ஜெயலலிதா நள்ளிரவில் கைது செய்தபோது அதிமுக கூட்டணியில் இருந்த நிலையிலும் சிறைக்கு ஓடிச் சென்று சந்தித்த முதல் அரசியல் கட்சியின் தலைவர் நான். அப்போது கருணாநிதியின் கைதை ஆதரித்து அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக நிர்பந்தித்தது. ஆனால், அதை திட்டவட்டமாக மறுத்தவன் நான்.

ஆனாலும், 1996ம் ஆண்டிலிருந்தே பாமகவை திமுக புறக்கணித்து வருகிறது. திமுகவின் இந்த பெரியண்ணன் மனப்பான்மை மாற வேண்டும். பாமகவிடம் அது நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார் ராமதாஸ்.

ராமதாஸ் ஆதரிக்க வேண்டும்-சிபிஐ

இதற்கிடையே ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க கூட்டணி நிறுத்தும் வேட்பாளர்களை பாமக ஆதரிக்க வேண்டும் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கோரியுள்ளார்.

அவர் கூறுகையில், மாநிலங்களவைக்கான தேர்தலில் தி.மு.க வேட்பாளார் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு தரும். அதே போல ராமதாசும் ஆதரவளிக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X