For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஒளரங்கசீப் ஓவியக் கண்காட்சியால் பரபரப்பு-ரத்து

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் முஸ்லீம் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய ஓவியக் கண்காட்சிக்கு போலீஸார் தடை விதித்தனர்.

பிரான்ஸைச் சேர்ந்த ஓவியர் பிரான்சிஸ் என்பவரின் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சிக்கு சென்னை லலித் கலா அகாடமியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒளரங்கசீப் ஆட்சிக் காலம் குறித்த ஓவியங்கள் இவை. அதில் ஜியா வரி கொடுக்காத இந்துக்களை மொகலாய மன்னர் ஒளரங்கசீப் யானைகளை வைத்து மிதித்து கொல்வது, முஸ்லீமாக மதம் மாற மறுத்த சீக்கிய மத குருவின் சீடர்கள் மூன்று பேரை வெட்டிக் கொல்வது போன்ற காட்சிகளும்,

மதுரா கிருஷ்ணர் கோவிலை இடித்து, பேகம் மசூதி கட்டி, மசூதி வாசல் படிக்கட்டிற்கு அடியில், கோவிலில் இருந்த கடவுள் விக்ரகங்களை புதைப்பது, குஜராத் சோமநாதர் கோவிலை இடிப்பது போன்ற காட்சிகள் ராஜஸ்தான் பாணி சித்திரங்களாக வைக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட நான்கு முஸ்லீம் அமைப்புகளின் நிர்வாகிகள் அங்கு வந்தனர். ஓவியர் பிரான்சிஸ் மற்றும் கண்காட்சி அமைப்பாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக இந்த கண்காட்சியை நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லீம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் கண்காட்சி அமைப்பாளர்கள் அதை ஏற்க மறுத்தனர்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். முஸ்லீம் அமைப்பினரை சமாதானப்படுத்தினர். பின்னர் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய ஓவியங்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்கு கண்காட்சி அமைப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கண்காட்சி அமைப்பாளர்களான சரஸ்வதி ரங்கநாதன், மாலதி, அனு ஆகியோரை அழைத்து போலீஸார் பேசினர்.

ஓவியங்களை அப்புறப்படுத்தி விடுங்கள், இல்லாவிட்டால் கண்காட்சியை ரத்து செய்ய நேரிடும் என்று போலீஸார் எச்சரித்தனர். ஆனால் அதை அமைப்பாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து கண்காட்சியை தொடர்ந்து நடத்த போலீஸார் தடை விதித்தனர்.

வி.எச்.பி. கண்டனம்:

இதற்கிடையே, ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்த அமைப்பாளர்களிடம் போலீஸார் அராஜகமாக நடந்து கொண்டுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வி.எச்.பி. அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சில சிறுபான்மையின அமைப்புகள் தந்த பொய்யான புகாரின் அடிப்படையில் ஓவியக் கண்காட்சியை நடத்த விடாமல் போலீசார் தடுத்துவிட்டனர்.

கண்காட்சிப் பொருள்களையும் சூறையாடிவிட்டு அதன் அமைப்பாளர்களை சட்டவிரோதமாக பிடித்துச் சென்றுள்ளனர். போலீசாரின் இந்த அராஜகப்போக்கு கண்டிக்கத்தக்கது.

முறைப்படி அனுமதி பெற்றே கண்காட்சியை நடத்தியுள்ளனர். ஆனாலும் ஆர்க்காடு இளவரசர் தலைமையில் திரண்டு வந்த சிலர் கண்காட்சி அமைப்பாளர்களை திட்டியும், ஓவியங்களை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியும் சென்றுள்ளனர்.

இந்துக்களுக்கு ஆதரவான அரசு என்று சொல்லிக் கொள்ளும் திமுக அரசு உண்மையில் பெரும்பான்மையின இந்துக்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகவும்தான் செயல்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணை நடத்த முதல்வர் கருணாநிதி உத்தரவிடவேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய கண்காட்சி, தீவிரவாத எதிர்ப்பு அறக்கட்டளை (பேக்ட்) சார்பில் நடத்தப்பட்டது. மொகலாய ஆவணங்களில் ஒளரங்கசீப் என்ற தலைப்பிலான இந்தக் கண்காட்சி மார்ச் 3ம் தேதி தொடங்கியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X