வியோமிங் மாகாணத்தில் ஓபாமாவுக்கு வெற்றி - ஹில்லாரிக்கு சறுக்கல்
சீயன் (வியோமிங்): வியோமிங் மாகாண வாக்கெடுப்பில் பாரக் ஓபாமா வெற்றி பெற்று தனது நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவருக்கும், ஹில்லாரிக்கும் இடையிலான வாக்கு வேறுபாடு மேலும் விரிவாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த ஒஹையோ மற்றும் டெக்ஸாஸ் மாகாண வாக்கெடுப்புகளில் ஹில்லாரி வெற்றி பெற்று ஓபாமாவின் தொடர் வெற்றிக்கு செக் வைத்தார். இந்த வெற்றியால் ஹில்லாரி தொடர்ந்து போட்டியில் நீடிப்பது உறுதியானது. இருப்பினும் வாக்குகள் அடிப்படையில் ஓபாமாவே முன்னணியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை வியோமிங் மாகாணத்தில் நடந்த கட்சி வாக்கெடுப்பில் ஓபாமா வெற்றி பெற்றார். இதனால் ஹில்லாரிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வியோமிங் மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் பெரும் திராளானோர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 2004ம் ஆண்டு நடந்த வாக்கெடுப்பில் வெறும் 160 பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாகாணம் குடியரசுக் கட்சியின் கோட்டையாக கருதப்படும் மாகாணம் ஆகும்.
இந்த மாகாணத்தில் நடந்த வாக்கெடுப்பில் பாரக் ஓபாமாக 23 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹில்லாரியை தோற்கடித்தார்.
ஹில்லாரிக்காக இங்கு பில் கிளிண்டன், அவரது மகள் ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் ஹில்லாரி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பே ஓபாமா சார்பில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தனது பிரசாரத்திற்காக இந்த மாகாணத்தில் ஐந்து அலுவலகங்களைத் தொடங்கியிருந்தார் ஓபாமா. ஆனால் ஹில்லாரியோ 2 அலுவலகங்களை மட்டுமே திறந்திருந்தார்.
மேலும் டிவி மூலமாகவும், ரேடியோ விளம்பரங்கள் மூலமாகவும் ஓபாமா தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ஆனால் இரண்டே இரண்டு ரேடியோ விளம்பரங்களை மட்டுமே ஹில்லாரி கொடுத்திருந்தார்.
இந்த வெற்றியை பெரிய வெற்றியாக ஓபாமா தரப்பு வர்ணித்துள்ளது. வியோமிங் மாகாணத்தில் புதிதாக சேர்ந்த ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஓபாமாவுக்குத்தான் ஆதரவாக வாக்களித்துள்ளனர். பழைய பிரதிநிதிகளும் கூட பொதுவாக ஓபாமாவுக்குத்தான் ஆதரவாக இருந்துள்ளனர்.
அடுத்து மிஸிஸிப்பி மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.