கைதி கணேசனை வேறு சிறைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி கணேசனை வேறு சிறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ள ஹேபியஸ் கார்பஸ் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் உள்துறை, வேலூர் எஸ்.பி., சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் கற்பழிப்பு வழக்கில் 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கணேசன் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் நதியா என்கிற தனது மனைவியை சிறை துணை ஜெயிலர் உள்ளிட்ட நான்கு பேர் கற்பழித்து விட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் பெரும் திருப்பமாக, உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நதியாவுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று அவரது தாயார் தெரிவித்தார். மேலும், நதியா கன்னித் தன்மையை இன்னும் இழக்கவில்லை என்று போலீஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மருத்துவ சான்றிதழ் தெரிவித்தது.
இதையடுத்து இந்த வழக்கை பைசல் செய்த உயர்நீதிமன்றம், பொய்யான புகார் கொடுத்தவர்கள் குறித்து விசாரித்து வழக்கு தொடருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கைதி கணேசனின் வழக்கறிஞர் அய்யப்பன் உயர்நீதிமன்றத்தில் இன்னொரு ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில் கைதி கணேசனை வேலூர் சிறையில் அதிகாரிகள் சித்திரவதை செய்கின்றனர். எனவே அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். அவரை சந்திக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பெரியகருப்பையா, முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கணேசனை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
சிறைத்துறைக்கு அதுபோல நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அரசுதான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறி உள்துறைச் செயலாளர், வேலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர், சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுதவிர மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் இதேபோல தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதிகள் பரிசீலனைக்கு அனுமதித்தனர்.