• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிமுகவின் கலாச்சாரமே அதுதான்-கருணாநிதி

By Staff
|

சென்னை: தேர்தலில் இந்துக்களை நிறுத்தினால் சிறுபான்மையினரைப் புறக்கணித்து விட்டோம் என்றும், இஸ்லாமியர்களை நிறுத்தினால் கிறிஸ்தவர்களைப் புறக்கணித்து விட்டோம் என்றும், கிறிஸ்தவர்களை நிறுத்தினால் இந்துக்களைப் புறக்கணித்து விட்டோம் என்றும் புகார் கூறுவது வழக்கமாகிவிட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி: மாநிலங்கவைத் தேர்தலில் திமுக சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், காரணம் ஒருவர் முஸ்லிம் வேட்பாளர் ஜின்னா, மற்றொருவர் கிறிஸ்தவ வேட்பாளர் வசந்தி ஸ்டான்லி என்றும், அதனால் இந்துக்களுக்கு 'அல்வா' கொடுக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு நாளிதழில் ஒருவர் எழுதியிருக்கிறாரே?

பதில்: கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றபோது திருச்சி சிவா, கனிமொழி ஆகிய 2 இந்துக்களை தானே நிறுத்தினோம். அப்போது இந்த 'பிரகஸ்பதி' என்ன சொல்கிறது.

இந்துக்களை நிறுத்தினால் சிறுபான்மையினரைப் புறக்கணித்து விட்டோம் என்றும், இஸ்லாமியர்களை நிறுத்தினால் கிறிஸ்தவர்களைப் புறக்கணித்து விட்டோம் என்றும், கிறிஸ்தவர்களை நிறுத்தினால் இந்துக்களைப் புறக்கணித்து விட்டோம் என்றும் புகார் கூறுவதும், அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டு ஒரு சில பத்திரிகைகள் வெளியிடுவதும் வழக்கமான ஒன்றாக ஆகி விட்டது.

கேள்வி: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டம் இடியாப்ப சிக்கலில் உள்ளது என்று செய்தி வந்திருக்கிறதே?

பதில்: இது போன்ற திட்டங்கள் விரைவாகவும் தடையின்றியும் நடைபெற வேண்டுமென்பதுதான் என் விருப்பம். ஆனால் எந்தவொரு திட்டத்தைத் தொடங்கினாலும், அதற்கு முட்டுக்கட்டைகள் ஏதோ ஒரு வழியில் வரத்தான் செய்கின்றன.

மற்ற மாநிலங்களில் இது போன்ற செயல்கள் விரைவாக நடைபெற்று விட்டன என்றால், அங்கே இது போன்ற திட்டங்களில் தடை ஏற்படுத்த வேண்டுமென்று நினைப்பவர்கள் அவ்வளவாக இல்லை என்பதுதான்.

விமான நிலைய விரிவாக்கத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் அழைத்து, அதற்காகவே தலைமைச் செயலகத்தில் கூட்டம் ஒன்றையும் நடத்தி அதிலே தான் முடிவெடுத்திருக்கிறோம்.

ஆனால் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள நாளேடு, அங்கே கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் பெரும்பாலானவை முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானது என்றும், அவர்களால்தான் கையகப்படுத்தும் பணி தாமதமாகிறது என்றும் எழுதியிருக்கிறது. இந்தச் செய்தியிலே எள்ளளவும் உண்மையில்லை. ஒரு சில நில உரிமையாளர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று சுலபமாக தடையாணை பெற்று விடுகிறார்கள்.

அது போன்ற சம்பவங்களில் மேல்முறையீடு செய்து நீதிமன்றங்களின் முடிவைப் பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. அதுதான் தாமதத்திற்கான உண்மைக் காரணமே தவிர தனிப்பட்ட யாருக்காகவும் இந்தத் திட்டம் இடியாப்ப சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கவில்லை.

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் 1989-90ம் ஆண்டுகளில் வடசென்னையில் ஒரு மின் திட்டத்தைத் தொடங்க வேண்டுமென்பதற்கான முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு, அதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அந்த நிலத்திற்கான உரிமையாளர்களும், எனக்கு மிகவும் வேண்டியவர்களுமான வி.ஜி.பன்னீர்தாஸ் சகோதரர்களிடம் தான் அந்த இடங்கள் இருந்தன.

அதனைக் கையகப்படுத்தும் முயற்சி நடைபெற்றபோது, அவர்கள் என்னைச் சந்தித்து தங்களுடைய அண்ணனின் விருப்பத்திற்கிணங்க வாங்கப்பட்ட இடம் அது என்றும், அதனைத் தர இயலாது என்றும் என்னிடம் கூறிய போது, அந்த இடத்திலே மின் திட்டத்தைத் தொடங்கி, தமிழக மக்களுக்கு உதவிட வேண்டுமென்பது எங்கள் அண்ணன், பேரறிஞர் பெருந்தகை அவர்களின் விருப்பம், எனவே அதனை நிறைவேற்றியே தீர வேண்டுமென்று பதில் கூறி, அவர்களுடைய ஒத்துழைப்போடு அந்த இடத்தை கையகப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனை அழைத்து வந்து அந்த திட்டத்தை தொடங்கி இன்றளவும் அத்திட்டம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே தனிப்பட்ட யாருக்காவும் இந்த அரசின் செயல்பாடுகள் தடைபடாது.

கேள்வி: அதிமுகவில் இருந்த வக்கீல் ஜோதி செய்தியாளர்களை சந்திக்க சென்னை பிரஸ் கிளப்பிற்கு வந்தபோது, அதிமுகவினர் சிலர் அவரைத் தாக்க முயற்சித்திருக்கிறார்களே?

பதில்: அதிமுகவின் கலாச்சாரமே அதுதான். மத்திய தேர்தல் ஆணையராக இருந்த டி.என்.சேஷன் தமிழகத்திற்கு வருகை தந்த போது விமான நிலையத்திலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு 'கேரோ' செய்ததும், பின்னர் அவர் தங்கியிருந்த தனியார் ஹோட்டலுக்கே சென்று தாக்கியதும் மறந்து விடக் கூடியதல்ல.

அது போலவே சுப்பிரமணியம் சுவாமி நீதிமன்றத்திற்கு வருகை தந்த போது, அவரை எதிர்த்து அதிமுக மகளிர் நடத்திய தாக்குதல் நாடகம் (சேலைகளை உயர்த்தி்க் காட்டி) அநாகரிகத்தின் உச்சமாகும்.

தமிழகத்தின் கவர்னராக இருந்த சென்னா ரெட்டியின் காரை வழிமறித்து தாக்கியதும், மூத்த வக்கீல்கள் விஜயன், சண்முகசுந்தரம், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா (இவரது முகத்தில் ஆசிட் வீசப்பட்டது), ஆடிட்டர் ராஜசேகரன் ஏன் அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரே தாக்கப்பட்ட வரலாறெல்லாம் தமிழகம் அறிந்த உண்மையாகும்.

அந்த வரிசையில்தான் தற்போது வக்கீல் ஜோதி இடம் பெற்றுள்ளார்.

கேள்வி: பொடா வழக்குகள் தொடர்பாக பழ.நெடுமாறனின் அறிக்கை நீங்கள் ஏதோ உண்மையை மறைக்க முயல்வதாக மீண்டும் அவர் அறிக்கை விடுத்துள்ளாரே?

பதில்: தூங்குபவரைத் தான் எழுப்ப முடியும், தூங்குவதைப் போல நடிப்ப வரை எப்படி எழுப்ப முடியும். விதண்டாவாதம் பேசுவதென்றே முடிவெடுத்து விட்டால் அதற்கு வைத்தியம் ஏது?

திமுக பொறுப்பேற்ற பிறகு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தவர்களையெல்லாம் விடுவிக்க அவர்கள் மீதான வழக்குகளையெல்லாம் திரும்பப் பெற முயற்சித்தது என்பது உண்மை. வைகோ மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலே உள்ளது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருப்பவர் வைகோ.

பாவாணன் மீதான வழக்கில் தமிழக அரசு திரும்பப் பெற மனு கொடுத்தும் பொடா நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் தமிழக அரசு மீண்டும் ஒரு முறை மறு ஆய்வு மனுவினை பொடா நீதிமன்றத்திலே தாக்கல் செய்துள்ளது.

மேலும் இன்றைய அறிக்கையில் நெடுமாறன் முன் தேதியிட்டு பொடா சட்டம் திரும்பப் பெற்றிருந்தால் பொடா வழக்குகள் அத்தனையும் முடிந்திருக்கும் என்கிறார். பொடா சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உள்ளது.

பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய, தான் பாடுபட்டதாகக் கூறும் முதல்வர் என்று நெடுமாறன் அறிக்கையிலே எழுதியிருக்கிறார். பொடா வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய நான் பாடுபட்டேனா இல்லையா என்பது நன்றி என்ற ஒரு வார்த்தைக்கு ஓரளவு பொருள் புரிந்தவர்களுக்குத் தான் தெரியும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X