ஈஸ்டர்: மக்களுக்கு கருணாநிதி-ஜெ. வாழ்த்து
சென்னை: ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்தவ சமூகத்தினருக்கு முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
கிறித்தவ சமுதாய மக்கள் அனைவரும் ஈஸ்டர் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடும், புத்துணர்வோடும் நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள்.
கிறித்தவ சமயம் தொண்டு சமயம் எனப் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் ஏசுநாதர் தமது அறிவுரைகளின் மூலமும், தம்முடைய செயல்கள் மூலமும் தம்மை நேசிப்பவர்கள் பிறருக்குத் தொண்டு செய்பவர்களாகவே திகழ்ந்திட வேண்டும் என்று விரும்புகிறார்.
"மிகச் சிறியரான என் சகோதரர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று தன் அன்பர்களிடம் பிறருக்குத் தொண்டு செய்திட வேண்டும் என அறிவுரை வழங்கிடும் ஏசுநாதர், "உனக்குத் திராணி இருக்கும்போது, உரியவருக்கு நன்மை செய்யாமல் இராதே; உன்னிடம் பொருள் இருக்கையில், நீ போய் வா, நாளைக்குத் தருவேன்' என்று அயலானிடம் சொல்லாதே'' என்று வலியுறுத்துகிறார்.
"நான் உங்களில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பு கூருங்கள்'' என்றும், "ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் பெரிதான அன்பு யாரிடத்திலும் இல்லை'' என்றும்,
"உன் அயலானில் அன்பு கூரு; உன் சத்துருவையோ பகை என்று சொல்லப்பட்டதாகக் கேட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்'' என்றும் கூறி அன்பை வளர்க்கிறார்; பகைமை உணர்வு அகன்று மண்ணில் மனித நேயம் பெருக வழிகாட்டுகிறார்.
இத்தகைய அறிவுரைகள் மூலம் அன்பும், மனித நேயமும், தொண்டு மனப்பான்மையும் உலகில் வளர வழிவகுத்த மனிதப் புனிதர் ஏசுநாதரைப் போற்றிக் கொண்டாடப்படும் ஈஸ்டர் திருநாளில் கிறித்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
ஜெயலலிதா:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்தியில்,
இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு, பின் உயிர்தெழுந்த ஒப்பற்ற திருநாளாம் ஈஸ்டர் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் அன்பிற்கினிய கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் என் மனப்பூர்வமான ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயேசு கிறிஸ்துவின் கருணையினால் இவ்வுலகம் எங்கும் மத நல்லிணக்கம், மனித நேயம், சமூக ஒற்றுமை ஆகியவை தழைத்தோங்கட்டும் அனைவரது வாழ்விலும் இருள் நீங்கி ஒளி வீசட்டும்.
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனை வருக்கும் என் உள மார்ந்த ஈஸ்டர் திருநாள், வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.