பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!
சென்னை: மத்திய அரசால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆறாவது தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-6) முடிவுகள், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திருமணமான பெண்களுக்கு எதிரான வன்முறை கணிசமாகக் குறைந்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வு-6 (NFHS-6) அறிக்கை தெரிவித்துள்ளது. 2019-21 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2023-24 காலகட்டத்தில் கணவன் தனது மனைவியர் மீதான வன்முறை 38.1 சதவீதத்திலிருந்து 28.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெண்கள் நலன் தொடர்பான திட்டங்கள் பலன் தரத் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.

மனைவியர் மீதான வன்முறை குறைவு
NFHS-6 அறிக்கையின்படி, 18 முதல் 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்களில் 28.5 சதவீதம் பேர் தங்கள் வாழ்க்கைத் துணைவரால் ஏதேனும் ஒரு வகையான வன்முறையை அனுபவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது முந்தைய NFHS-5 அறிக்கையில் 38.1 சதவீதமாக இருந்தது. கிராமப்புறங்களில் இந்த விகிதம் 32.4 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 23.9 சதவீதமாகவும் உள்ளது.
NFHS-5 ஆய்வு கடந்த 2019-21 காலகட்டத்தில் நடத்தப்பட்டது தான் NFHS ஐந்தாவது கணக்கெடுப்பு.
குறிப்பாக, கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறைக்கு ஆளான பெண்களின் விகிதம் 3.3 சதவீதத்திலிருந்து 3.0 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. இந்த முன்னேற்றம், அரசின் பெண்கள் நலத் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு மூலம் சில அளவுக்கு வெற்றி பெற்றுள்ளதை உணர்த்துகிறது.
இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை
18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களில் 18 வயதுக்குள் பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களின் விகிதம் 0.1 சதவீதமாக உள்ளது. முந்தைய ஆய்வில் இது 0.0 சதவீதமாக பதிவாகியிருந்தது.
இதில் நகர்ப்புறங்களில் உள்ள இளம் பெண்களிடம் இந்த வன்முறை விகிதம் முற்றிலும் இல்லாத நிலை (0.0%) நீடிக்கும் வேளையில், தமிழகக் கிராமப்புறப் பகுதிகளில் இது 0.2 சதவீதம் என்ற அளவில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முந்தைய ஆண்டுகளை விடப் படிப்படியாகக் குறைந்து வருவது சமூக வளர்ச்சியைக் காட்டினாலும், கிராமப்புறப் பெண்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அரசு மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதை இந்த NFHS-6 அறிக்கை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.












Click it and Unblock the Notifications