ஊதியக் கமிஷன் பரிந்துரை- ஸ்டிரைக்கில் குதிக்கும் மத்திய அரசு ஊழியர்கள்
சென்னை: 6வது ஊதியக் கமிஷனின் பரிந்துரையில் கடும் அதிருப்தி அடைந்துள்ள மத்திய அரசு ஊழியல் ஏப்ரல் மாதம் 2வது வாரத்திலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் நீதிபதி கிருஷ்ணா தலைமையிலான 6வது ஊதியக் கமிஷன் தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்தது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 40 சதவீத ஊதிய உயர்வுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சி, டி பிரிவு ஊழியர்களை விட உயர் அதிகாரிகளுக்கான ஊதியத்தை வெகுவாக அதிகரிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பது லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் தேச விரோதமானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வர்ணித்துள்ளது. பாஜக ஆதரித்துள்ளது. இந்த நிலையில் ஊதியக் கமிஷன் பரிந்துரையை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க ஊழியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதுகுறித்து தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஊதியக் கமிஷன், இதுவரை வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை பறித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை எதிர்த்து மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏப்ரல் 2வது வாரத்திலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
டி பிரிவு ஊழியர்களுக்கு குறைந்தபட் ஊதியமாக ரூ. 10,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். அரசுப் பணியில் 9 லட்சத்து 70 ஆயிரம் பணியிடங்களை ஒழிக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். விடுமுறை நாட்களை 3 ஆக குறைத்திருப்பதைக் கைவிட வேண்டும். ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை தனியார் மயம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மேற்கொள்வோம் என்றார்.