For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்குனேரி பொருளாதார மண்டலத்துக்கு விடிவுகாலம்:ஒப்பந்தம் கையெழுத்து-70,000 வேலை வாய்ப்புகள்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியி்ல் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க ஏஎம்ஆர் நிறுவனத்துடன் தமிழக அரசு இன்று ஒப்பந்தம் செய்து கொண்டது.

தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு வித்திட மறைந்த முரசொலி மாறன் கனவு கண்ட திட்டம் இது. 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடந்த திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ஆனால், மாறன் கொண்டு வந்த திட்டம் என்ற காரணத்தினாலேயே இதை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கிடப்பில் போட்டார்.

இந் நிலையில் இப்போது இந்தத் திட்டம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏஎம்ஆர் கட்டுமான (AMR Constructions) நிறுவனத்துடன் இணைத்து இந்தத் திட்டத்தை தமிழக அரசின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) நிறைவேற்றவுள்ளது.

ரூ. 15,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கவுள்ள இந்த தொழில் மண்டலத்தின் மூலம் 70,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்திடவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அங்கு தொழில் முனைவோரை ஊக்குவித்து தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உதவியாக, பல்வேறு பொருள்களின் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்றினை திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் டிட்கோ உதவியுடன் கூட்டு முயற்சியில் நிறுவிட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

2001ம் ஆண்டு பிப்ரவரி திங்களில் தமிழக முதல்வர் கருணாநிதியால் இத்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து 2001-2006-ம் ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் (ஜெயலலிதா) இத் திட்டத்தை செயல்படுத்திட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

2006 மே மாதம் மீண்டும் இந்த அரசு அமைந்த பிறகு, இத்திட்டத்தினை ஹைதராபாத்திலுள்ள ஏ.எம்.ஆர். கன்ஸ்டிரக்ஷன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மூலமாக கூட்டுத் துறையில் நிறைவேற்றிட தமிழக அரசு முடிவு செய்தது.

இத்திட்டத்திற்கு போதிய அளவில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 2007 மே மாதம் மத்திய அரசு இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு முறைப்படி ஒப்புதல் வழங்கியது.

டிட்கோ நிறுவனம், ஏ.எம்.ஆர். குரூப் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்களின் (ஏ.எம்.ஆர்.எல். இண்டர்நேஷனல் டெக் சிட்டி லிமிடெட்) கூட்டு முயற்சியில் இத்திட்டத்தை நிறைவேற்றும்.

2,520 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் இந்த பல்துறை உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பெருந்திட்ட அடிப்படையில், செய்முறைக்கான நிலப்பரப்பு 1,500 ஏக்கர்.

செய்முறை அல்லாத நிலப்பரப்பு 1,000 ஏக்கர். பல்பொருள் உற்பத்தி சிறப்பு பொருளாதார மண்டலமாக இருப்பதால் அனைத்து வகை தொழில்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை இச் சிறப்பு பொருளாதார மண்டலம் அளிக்கும்.

இச்சிறப்பு பொருளதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மற்றும் பொருள் போக்குவரத்து ஆகியவை தொடர்பான தொழில்களை தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களில் நிறைவேற்றப்படவுள்ள இந்த நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் ரூ. 15,000 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்க்கும். இத்திட்டம் முழுமையாக செயல்படத் தொடங்கும்போது ஏறத்தாழ 70,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும்.

இது தமிழகத்தில் அமையும் பல்முறை பொருள்கள் சார்ந்த முதல் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசின் சார்பில் டிட்கோ நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமசுந்தரம், ஏ.எம்.ஆர். கன்ஸ்டிரக்ஷன்ஸ் சார்பில் ஏ.மகேஷ் ரெட்டி, ரவிகுமார் ரெட்டி ஆகியோர் கையெழுத்திட்டனர்.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X