"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!
கொல்கத்தா: பாத்திரம் கழுவி வீட்டு வேலை செய்து மாதம் ரூ.4,000 வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்த கலிதா மாஜி என்ற பெண் தற்போது மாண்புமிகு அமைச்சர் ஆகியுள்ளார். வீட்டு வேலை செய்து வந்து தற்போது மேற்கு வங்க அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்றிருப்பது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து அரசியலில் உயர்ந்த அவரது பயணம் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகம், கேரளா சட்டசபை தேர்தலை போன்றே, மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். புதிய அரசு கடந்த மாதம் 9 ஆம் தேதி பதவியேற்ற நிலையில், நேற்று அவரது கேபினட் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக 35 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

மாண்புமிகு அமைச்சர் ஆன கலிதா மாஜி
இதில் கலிதா மாஜி என்பவரும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் மாண்புமிகு அமைச்சராகியிருக்கும் கலிதா மாஜி, சமையல் பாத்திரங்களை கழுவி, வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தவர் ஆவார். மிகவும் சாதாரண குடும்ப பின்னணியை கொண்ட கலிதா மஜ்ஹியின் மாத வருமானம் வெறும் ரூ.4,000 மட்டுமே..
அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படும் போதே, பெரிதும் பேசப்பட்டது. தற்போது அமைச்சராகவே பாஜக அவருக்கு பதவி கொடுத்து அழகு பார்த்து இருக்கிறது. மேற்கு வங்க அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. கலிதா மாஜி இது பற்றி கூறுகையில், "தன்னை போல ஒரு பின்னணி கொண்ட ஒருவர் ஒருநாள் அமைச்சராவார் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்தது இல்லை.
கனவில் கூட நினைக்கவில்லை
என்னைப்போல சாதாரண நபர்களால் ஒருநாளும் இத்தகைய பதவிக்கு வர முடியாது. எனது கனவில் கூட இந்த பதவியை நினைத்து பார்த்தது இல்லை. எனது திருமணத்திற்கு பிறகு, பிற வீடுகளில் வீட்டு வேலை செய்யும் பணியை நான் செய்ய தொடங்கினேன். 2014 ஆம் ஆண்டு நான் பிரதமர் மோடியை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவரது பணிகளால் ஈர்க்கப்பட்டு நான் பூத் லெவலில் பாஜகவிற்காக வேலை செய்ய தொடங்கினேன்.
கட்சியின் அமைப்பு ரீதியான பணிகளில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினேன். எனது பங்களிப்பை பார்த்து கட்சி தலைவர்கள் எனக்கு பெரிய பொறுப்புகளை வழங்கி ஊக்கமளித்தார்கள். உள்ளூர் பிரிவின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சி தலைமை என்னிடம் கூறிய போது, நான் தயங்கினேன். அரசியலையும் குடும்பப் பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் என்னால் எப்படிச் சமாளிக்க முடியும் என்று நான் யோசித்தேன்.
பல இன்னல்களுக்கு ஆளானேன்..
ஆனால் எனது மாமனார் எனக்கு நல்ல ஆதரவாக இருந்தார். குடும்பத்தை கவனித்துக்கொள்ள அதிக நேரம் செலவிட முடியாது என்று நான் கூறிய போது, நான் ஏற்கனவே தேவையான அளவுக்கு வேலை செய்துவிட்டேன்.. இனி சமூகத்திற்காக உழைக்கவும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்" என்றார்.
"கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கலிதா மாஜிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதில் தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு, அரசியல் வன்முறைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்தன. கட்சியினர் பலரும் கட்டாயமாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். நானும் இன்னல்களுக்கு ஆளானேன். ஆனால் அதைக்கண்டு துவளாமல், கட்சிக்காக இன்னும் உறுதியாக பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன்" என்றார். வீட்டு வேலை செய்து வந்த கலிதா மாஜி, அமைச்சராக பதவியேற்றது பற்றி மேற்கு வங்கத்தில் பலரும் நெகிழ்ச்சியாக பேசி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications