இட ஒதுக்கீடு-ராம. கோபாலனின் கோரிக்கை
கோவை: பங்கு சந்தை வணிகத்தில் பிற மதத்தினர் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.
கோவையை அடுத்த துடியலூரில் ராமகோபாலனுக்கு இந்து முன்னணி சார்பில் சதாபிஷேக விழா நடத்தப்பட்டது.
அதில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ராம கோபாலனுக்கு ரூ.81,000க்கான பண முடிப்பு வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட ராமகோபாலன் பேசியதாவது:
தமிழ்நாட்டில் இந்து கோவில்களை பராமரித்து மூன்று கால பூஜைகள் நடத்தப்பட வேண்டும்.
வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8.52 ஏக்கர் மீட்கப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து கோவிலின் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில்களில் கூட்டுப் பிரார்த்தனை செய்தால் நலன் பலன்கள் ஏற்படும். அனைத்து இந்துக்களின் வீடுகளில் ராமாயணம், மகாபாராதம், பகவத் கீதை போன்ற சமய நூல் வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மதமாற்றத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர் கொள்ள வேண்டும். பசுவதை தடை செய்ய வேண்டும். பசுக்களை போற்றி வளர்க்க வேண்டும்.
இந்துக்களுக்கு கிடைக்க கூடிய இடஒதுக்கீட்டை பிற மதத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு அமைந்துள்ளதை மாற்ற வேண்டும்.
பிற மதத்தினர் பங்கு சந்தை வணிகத்தில் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும்.
என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறார்கள். இதற்கு நான் கவலைப்படுவது இல்லை. நான் சேவை செய்யும் போது உயிர்விட ஆசைப்படுகிறேன் என்றார்.