எறையூரில் 12 வீடுகள் தீயில் எரிந்து சாம்பல்-மீண்டும் பதட்டம்
ிழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் எறையூர் கிராமத்தில் 12 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. இதையடுத்து அங்கு மீண்டும் பதட்டம் நிலவுகிறது. பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் எறையூரில் தலித் கிறிஸ்தவர்களுக்கும், வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே பெரும் மோதல் நிலவி வருகிறது. இரு தரப்பினருக்கும் தனித் தனியாக சர்ச் வேண்டும் என்று வன்னிய கிறிஸ்தவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் பாதை குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு இந்த மோதல் பெரிதாக வெடித்து பெரும் வன்முறையாக மாறியது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். இதையடுத்து போலீஸ் தரப்பிலும், புதுச்சேரி மறை மண்டலத் தரப்பிலும் பலசுற்று சமரசப் பேச்சுக்கள் நடந்தன.
இதனால் அப்போதைக்கு அமைதி ஏற்பட்டது. ஆனால் தற்போது மறுபடியும் மோதல் வெடித்துள்ளது.
நேற்று வன்னிய கிறிஸ்தவ வகுப்பைச் சேர்ந்த புஷ்பதெரசா என்பவருடைய வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அப்பகுதியினர் திரண்டு தீயை அணைத்துக் கொண்டிருந்தபோது, அடுத்தடுத்து அருகில் இருந்த குடிசைகளும் தீப்பிடித்து எரிந்தன.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் 12 குடிசைகள், 3 வைக்கோல்போர்கள் எரிந்து சாம்பலாயின. பல லட்சம் பொருட்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தீவிபத்து காரணமாக எறையூரில் பதட்டம் நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.