கர்ப்பிணிப் பெண் எரித்து கொடூரக் கொலை
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே கர்ப்பிணிப் பெண் எரித்துக் கொல்லப்பட்டார்.
நாகர்கோவில் அடுத்த கங்கான்கடையை சேர்ந்தவர் அமுதா. இவருக்கும் நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மாவடியான் புதூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் கடந்த 28-11-2007 அன்று திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு அமுதா தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். ரமேஷ் செங்கல் சூலை தொழிலாளி. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னும் இருவருக்கும் இடையே பயங்கர தகராறு வந்துள்ளது.
ரமேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் அமுதாவை கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் மனம் உடைந்த நிலையில் அமுதா இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அமுதா திடீரென தீயில் கருகி அலறினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அவரை கணவன் வீட்டார் எரித்துக் கொன்று விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அமுதாவிற்கு தந்தை இல்லை. தாய் பாப்பாவின் உழைப்பில்தான் இந்த திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு மகள் வாழ்க்கை சந்தோஷமாக இல்லையே என கூறி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் பாப்பா வருத்தப்பட்டு உள்ளார். தற்போது அமுதா இறந்த தகவல் அவரின் உறவினர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.