For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலையேற்றம்: மன்மோகன் கருத்தால் இடதுசாரிகள் கொதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Manmohan singh
டெல்லி: விலைவாசி உயர்வு பிரச்னயை அரசியலாக்க வேண்டாம் என்ற பிரதமர் மன்மோகன் கருத்துக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இடதுசாரி தலைவர்கள் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்து பேச்சு நடத்தினார்கள். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர்கள், இதுதொடர்பாக பிரதமரிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர்.

அப்போது, சர்வதேச அளவில் உள்ள விலைவாசி நிலவரம், உணவுப் பொருள் உற்பத்தி நிலைமை போன்ற விவரங்களை எடுத்துக்கூறிய பிரதமர் மன்மோகன் சிங், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு மன்மோகன் சிங்கின் அறிக்கையை அவரது பத்திரிகை ஆலோசகர் சஞ்சய் பாரு வெளியிட்டார். அந்த அறிக்கையில் மன்மோகன் கூறியதாவது:

விலைவாசி நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொது வினியோக திட்டத்தையும், உணவுப் பொருள் கொள்முதல் திட்டத்தையும் பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

சர்வதேச அளவில் விலைவாசி நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. உணவு உள்ளிட்ட பிற பொருட்களின் விலையும், சமையல் எண்ணை விலையும் கடுமையாக உயர்ந்து இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் விலைவாசி உயர்வு குறைவாகத்தான் உள்ளது. பல நாடுகளில் பணவீக்கம் மிகவும் அதிகரித்து இருக்கிறது.

1980களிலும், 1990களின் ஆரம்பத்திலும் நம் நாட்டில் விவசாய உற்பத்தி அதிகமாக இருந்தது. 1996க்கு பிறகுதான் விவசாயம் அலட்சியப்படுத்தப்பட்டது.

வேளாண் பொருட்களின் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும், அவர்களுடைய நிதிநிலையை மேம்படுத்தவும், விவசாய ஆராய்ச்சி மற்றும் சந்தைபடுத்துதலுக்கான முதலீட்டை அதிகரிக்கவும் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த ஆண்டில் பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வேளாண்மை பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொள்முதலும் அதிகரிக்கும்.

பீதியை உருவாக்க வேண்டாம்:

வேளாண்மை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மாநில அரசுகள் கவனத்தை செலுத்தும் வகையில் தேசிய வளர்ச்சி கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுத்து இருக்கிறேன்.

எனவே விலைவாசி உயர்வு பற்றி மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்படி பீதியை உண்டாக்கினால் அது பதுக்கல்காரர்களுக்கும், கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும் உதவி செய்வதாக அமைந்து விடும். அவர்கள் உணவுப் பொருட்களை பதுக்கும் நிலை ஏற்பட்டு நிலைமை மேலும் மோசம் அடைந்து விடும்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன் என அதில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

பிரதமருக்கு இடதுசாரிகள் கண்டனம்:

பிரதமரின் இந்த கருத்துக்கு இடதுசாரி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரதமரின் கருத்து தங்களை மிகவும் அவமதித்து விட்டதாகவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறினால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அதற்கான அரசியல் விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் அவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் கூறியதாவது:

பிரதமர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை எங்களை (இடதுசாரி கட்சிகள்) குறிப்பிடுவதாகத்தான் உள்ளது. ஏனெனில் காலையில் பிரதமரை நாங்கள் சந்தித்து பேசியபிறகு இந்த அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. எனவே அந்த அறிக்கை வெளிப்படையாக எங்களைத்தான் குறிப்பிடுகிறது.

பிரதமர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல் விலைவாசி உயர்வு பற்றி மக்களிடையே நாங்கள் பீதியை ஏற்படுத்தவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நாங்கள் சில யோசனைகளை தெரிவித்து இருக்கிறோம்.

இதை வைத்து விலைவாசி உயர்வு பிரச்சினையை அரசியலாக்க விரும்புவதாக எப்படி கூறலாம்? உணவுப் பொருள் பதுக்கலுக்கும், பற்றாக்குறைக்கும் நாங்களா காரணம்? மற்ற நாடுகளை விட இந்தியாவில் விலைவாசி குறைவாக இருப்பதாக பிரதமர் கூறுவது சரி அல்ல. உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து இருப்பது சரி என்றால் விலைவாசி அதிகரித்து இருப்பது ஏன்?

மத்திய அரசை நாங்கள் மிரட்டவில்லை. அதே சமயம் இடதுசாரி கட்சிகளின் ஆதரவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நாங்கள் நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி பாராளுமன்ற சபாநாயகரிடம் தாக்கல் செய்வோம் என்றார் பரதன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா கூறுகையில்; விலைவாசி உயர்வு மக்கள் சந்திக்கும் கடுமையான பிரச்சினை. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும். இந்த பிரச்சினையை நாங்கள் அரசியல் ஆக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

சீதாராம் யெச்சூரி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறியதாவது:

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் துரதிருஷ்டமானது ஆகும். மக்கள் பிரச்சினைகளை எழுப்புவது அரசியல் கட்சிகளின் கடமை. அதில் இருந்து நாங்கள் தவறமாட்டோம்.

பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ள கருத்தை பார்க்கும் போது அவர்கள் இந்த பிரச்சினையை அரசியல் ஆக்குவதாக தெரிகிறது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் இன்னல்களுக்கு அரசு தீர்வு காணவேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X