For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிவாலயத்திலிருந்து இடம் பெயருகிறது சன் டிவி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவுடன் ஒட்டி உறவாடி, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி அசத்திக் கொண்டிருந்த சன் டிவி ஒரு வழியாக அங்கிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சொந்தக் கட்டடத்திற்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளது.

திமுகவின் பிரச்சார பீரங்கியாக உருவானதுதான் சன் டிவி. திமுக உதவியோடு தொடங்கப்பட்ட சன் டிவி, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்து, திமுக தரப்புக்கு பெரும் பலமாக இருந்தது.

ஆனால் எல்லாமே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருணாநிதியின் வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு வரைதான். அந்தக் கருத்துக் கணிப்பினால் கொந்தளித்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரை தினகரன் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவத்தை தமிழகமே திகிலுடன் பார்த்து மிரண்டது.

அத்துடன் முடிவுக்கு வந்தது திமுக-சன் குழுமத்தின் உறவும், நட்பும், பாசமும், பந்தமும்.

இந்த சம்பவத்திற்குப் பின்னர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டிவி அலுவலகத்திற்கு அடுத்தடுத்து பல நெருக்கடிகள் கிளம்பின.

சன்னுக்குப் போட்டியாக அதே வளாகத்தில் கலைஞர் டிவி அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது. எப்போது வேண்டுமானாலும் அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்தே இருந்ததால், சன் டிவியும் மாற்று இடம் தேட ஆரம்பித்தது.

ராஜா அண்ணாமலைபுரத்தில், மேயர் ராமநாதன் திருமண மண்டபத்துக்குப் பின்புறம் (ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் கல்யாணம் தடபுடலாக நடந்ததே அந்த இடம்தான்..) ஏற்கெனவே பிரமாண்டமாய் கட்டடம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள் சன் ஸ்டுடியோவுக்காக.

திமுகவுடன் கசப்புணர்வு தோன்றியபிறகு, ராஜா அண்ணாமலைபுரத்துக்கே நிரந்தரமாய் போய்விடத் தீர்மானித்தார்கள்.

இடையில் அறிவாலயத்தில் நெருக்கடிகள் முற்றின. முதலில் பார்க்கிங் பகுதியில் சன் டிவி நிறுவனத்தின் வாகனங்களை நிறுத்த தடை விதித்தது திமுக தரப்பு.

அதன் பின்னர் மெதுவாக குடிநீரில் கையை வைத்தனர். குடிநீர் சப்ளை துண்டிக்கப்பட்டதால் சன் டிவி ஊழியர்களுக்கு குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டது. அதையும் சமாளித்து அமைதி காத்தனர்.

அதன் பின்னர் அண்ணா அறிவாலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சன் டிவிக்கு போர்டுக்கு முன்பாக பெரிய சைசில் கலைஞர் டிவியின் போர்டை வைத்து சன் டிவியின் போர்டை மறைத்தனர். ஆனால் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் (சன்) மறைவதில்லை என்பதைப் போல சன் டிவி சற்றும் சளைக்காமல் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது. (இப்போது மீண்டும் சன் டிவி போர்டு பளிச்சிடுகிறது அறிவாலயத்தில்)

பின்னர் சன் டிவியின் செக்யூரிட்டிகளை அறிவாலய வளாகத்தில் நிற்கக் கூடாது என்று கூறினர்.

இப்படி அடுக்கடுக்காக நெருக்கடிகள்.

தற்போது சன் டிவியின் புதிய சொந்த அலுவலக வளாகம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு கம்பீரமாய் நிற்கிறது.

இம்மாத கடைசிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி அலுவலகம் இந்த புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவிடும் என்கிறது சன் தரப்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X