அப்பாவிகளை கைது செய்வதா?-இன்ஸ்பெக்டருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
மதுரை: அப்பாவிகளை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடந்த 1999 ம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பாக 152 பேர் மீது வழக்கு பதிவு கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆறுமுகம், முத்து ஆகியோருக்கு பதிலாக முருகன், முத்து ஆகியோரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நாகமுத்து விசாரித்தார். அப்போது, வழக்கில் தொடர்பு இல்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்தது சட்ட விரோதம். இது மனித உரிமையை மீறிய செயல். அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த போலீஸ் அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இந்த வழக்கில் அப்பாவிகள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் குளித்தலை இன்ஸ்பெக்டர் முருகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். இதையடுத்து ஜாமீன் கோரிய முருகன், முத்துவை உடனே விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
மனித உரிமையை பறிக்கும் போலீசாருக்கு எதிராக நீதிமன்றம் சாட்டையை சுழற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.