ரயிலில் சீட் ஒதுக்காததால் எம்எல்ஏக்கள் வாக்குவாதம்-எக்ஸ்பிரஸ் தாமதம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்வதற்கு ரயிலில் சீட் ஒதுக்கீடு கிடைக்காததால் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் கன்னயாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடம் தாமதமாக புறப்பட்டது.
சென்னையில் இன்று சட்டசபை கூட்ட தொடரில் கலந்து கொள்வதற்காக குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் ராஜன், ஜெயபால், ஜான் ஜோசப், ஜான் ஜேக்கப், லீமா ரோஸ், ரெஜினால்டு ஆகியோர் நான்கு பேரும் நேற்று மாலை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கடந்த 2ம் தேதி முன்பதிவு செய்திருந்தனர்.
ஆனால் அவர்களது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தது. இதையடுத்து எமர்ஜென்சி கோட்டாவுக்கு எம்எல்ஏக்கள் விண்ணிப்பித்திருந்தனர். இந்த மனுக்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கோட்ட அலுவலகத்துக்கு சென்று பின்னர் எமர்ஜென்சி கோட்டாவில் ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி ரெஜினால்டு மற்றும் லீமா ரோஸ் ஆகியோருக்கு மட்டும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மற்ற 4 எம்எல்ஏக்களுக்கு சீட் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை நேற்று மாலை நாகர்கோயில் ரயில் நிலையத்துக்கு அனைவரும் வந்தனர். சீட் கிடைக்காத 4 எம்எல்ஏக்களும் அதிகாரிகளிடம் பேசினர். ரயில்வே அதிகாரிகள் அதற்கு சரியாக பதலளிக்கவில்லை என்று தெரிகிறது.
இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சமரசம் செய்தனர். இதையடுத்து சுமார் 45 நிமிடத்துக்கு பின் 3ம் வகுப்பு எசி வகுப்பு பெட்டியில் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்கித்தரப்பட்டது. எம்எல்ஏக்களின் உதவியாளர்களுக்கும் சீட் ஒதுக்கித் தரப்பட்டது.
5.30 மணிக்கு கன்னியாக்குமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிட தாமதத்துக்குப் பின் புறப்பட்டுச் சென்றது.