• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகம் தீவிரவாதிகளின் ஆயுத சந்தையாகிவிட்டது-அதிமுக

By Staff
|

சென்னை: தமிழகம் தீவிரவாதிகளின் ஆயுதச் சந்தையாக மாறிவிட்டதாக சட்டசபையில் அதிமுக குற்றம் சாட்டியது.

சட்டசபையில் உள்துறை, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதம்

சேகர்பாபு (அதிமுக):

கடந்த நான்கு மாதங்களில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சென்னை நகர மக்கள் பீதியில் உள்ளனர். உலக வங்கியே சென்னையில் கிளை அலுவலகம் அமைக்க முன் வந்த அமைதியான சூழ்நிலை அதிமுக ஆட்சியில் நிலவியது. ஆனால், இன்று உள்ளூர் மக்களுக்கே பாதுகாப்பு தர முடியாத நிலை.

காவல் துறையினர் ஒருவரது டெலிபோனை ஒட்டுக் கேட்க வேண்டுமானால் அதற்கு உள்துறைச் செயலாளரின் ஒப்புதலைப் பெற வேண்டும். சமீபத்தில் நடந்த டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் எழுந்து ஒரு மாதமாகியும் உள்துறை செயலாளர் பதில் தரவில்லை. இது குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். கமிஷன் விசாரணை தொடக்கம் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் ஏதும் செய்யப்படவில்லை.

அமைச்சர் துரைமுருகன்: பத்திரிக்கைகளில் விளம்பரம் வந்துள்ளது. சேகர்பாபு அதை பார்க்காவிட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

சேகர்பாபு: இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்ட பின் சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் ரெய்ட் நடந்துள்ளது. விசாரணையின் போக்கு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக இது நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 47 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்படி இருந்தால் சட்டம்-ஒழுங்கை எப்படி காப்பாற்ற முடியும்? .ஆண்டுதோறும் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜாதி, மத மோதல்கள் அதிகரித்துள்ளன. போலீசாரின் துப்பாக்கிகள் பறிபோயுள்ளன. தமிழகம் தீவிரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதச் சந்தையாகவும் மாறியுள்ளது. பூட்டிய வீட்டிலும் திருட்டு நடக்கிறது, ஆள் இருக்கும் வீட்டில் அவர்களைக் கட்டிப் போட்டு விட்டு கொள்ளை நடக்கிறது.

திமுக உள்கட்சித் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் காவல் துறையினர் மீதே தாக்குதல் நடந்துள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது போலீசாரின் துணையுடன் அராஜகம் நடந்தது.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அதிமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மேயராக போட்டியிட்ட போது அதிமுகவினர் எந்த அளவு வன்முறையில் ஈடுபட்டனர், வாக்குசாவடிகளை கைப்பற்றியது எல்லாம் மக்களுக்கு தெரியும். தி.மு.க அரசு நியாயமாக தேர்தலை நடத்தியது.

சேகர்பாபு: அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அவர் மேயராக வந்திருக்க முடியாது.

ஆற்காடு வீராசாமி:- நாங்கள் கவர்னரிடம் முறையிட்டதால், அவர் தலையீட்டின் பேரில் தான் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய ஸ்டாலின் ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சேகர்பாபு: நீங்கள் தேர்தல் நடத்திய விதத்தைப் பார்த்து தான் ஐகோர்ட்டே மறுதேர்தல் நடத்த உத்தரவிட்டது.

ஆற்காடு வீராசாமி:- நீதிமன்றம் தீர்ப்பு கூறும் முன்பே அந்த வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த உத்தரவிட்ட ஒரே முதல்வர் கருணாநிதிதான்.

ஜி.கே.மணி (பா.ம.க.): குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு குற்றவாளிகள் அதிகரித்திருப்பது ஒரு காரணம் என்றாலும், உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதும், குற்றவாளிகள் தண்டனை பெறும் அளவுக்கு வழக்கை சரியாக நடத்தாததும், சரியான ஆதாரங்களை கொடுக்காமல் விடுவிக்கப்படுவதும் தான் முக்கிய காரணமாகிறது. இதில் போலீசார் அக்கறை செலுத்த வேண்டும்.

கூலிப் படையினரால் நடத்தப்படும் கொலைகள் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று கண்டறிந்து தண்டிக்கப்பட்டால் தான் இந்த குற்றங்கள் குறையும். தங்க காசு சங்கிலி தொடர் வழக்கில் போலீசார் பின்வாங்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் யார் தலையீடும் இருக்கக் கூடாது.

என்கவுண்டர்களில் உள்ளபடியே மோதல் நடந்ததா, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 2, 3 நாட்கள் வைத்திருந்து பின்னர் கொல்லப்படுவதாக கூறுகிறார்கள், இவைகள் விளக்கப்பட வேண்டும்.

மதுக் கடைகளையும், விற்பனை நேரத்தையும் குறைக்க வேண்டும். கந்துவட்டி, கஞ்சா, திருட்டு லாட்டரி சீட்டுகள் இவைகள் இன்னமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன; இவைகளை ஒழிப்பதில் காவல்துறை அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X