கர்நாடகாவில் கள்ளச்சாராயம் குடித்து ஓசூரில் 9 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, ராயக் கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஆனேகல் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி கூலி வேலைக்குச் செல்வது வழக்கம்.
திங்கள்கிழமை வேலைக்குச் சென்று விட்டு வார இறுதி நாளான சனிக்கிழமையன்று சொந்த ஊர் திரும்புவார்கள்.
அதேபோல, தேன்கனிக்கோட்டையை அடுத்த பின்னமங்கலம், தேவகானப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல நேற்றிரவு ஒரு வார வேலைக்கான கூலியைப் பெற்றுக் கொண்டு ஊர் திரும்பினர்.
வரும் வழியில் கர்நாடக மாநிலம் ஆனேகல் அருகே உள்ள சோலூர் என்ற இடத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். பின்னர் ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் இன்று காலை, பின்னமங்கலம், அடவிசாமிபுரம், தேவகானப்பள்ளி ஆகிய ஊர்களைச் சேர்ந்த, சாராயம் குடித்த தொழிலாளர்கள் படுக்கையிலேயே வாந்தி எடுத்து குடல் வெந்த நிலையில் பிணமாக கிடந்தார்கள்.
தேவகானப் பள்ளியைச் சேர்ந்த மெகபூப் (50), மாதப்பா (60) அடவிசாமி புரம் வெங்கடப்பா என்பவரது மனைவி குப்பம்மாள் (65), பின்னமங்கலத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மனைவி ஆஞ்சனம்மாள் (48), அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் (40), சின்னப்பா (55), கிருஷ்ணப்பா (68) மற்றும் ஒரு பெண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் ஆவர்.
ரவிரெட்டி என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னமங்கலம் முனிராஜ் (32), இளையசத்திரம் முனுசாமி என்ற படிகப்பா (45), சின்னப்பா, இன்னொரு சின்னப்பா, கோபால் ரெட்டி, ராம ரெட்டி, மல்லேஷ், பில்லப்பா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேன்கனிக்கோட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இவர்களில் முனிராஜ், படிகப்பா ஆகியோர் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலருக்கு பார்வை பறிபோயுள்ளது.
சம்பவம் நடந்த கிராமங்களுக்கு சேலம் சரக டிஐஜி செண்பகராமன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் செண்பகராமன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பின்னமங்கலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்தான் விஷச் சாராயத்தை ஆனேகல் பகுதியிலிருந்து வாங்கி வந்து விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இவரது கணவர் ஏற்னவே கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பார்வதியை தற்போது போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். விஷச் சாராயத்தை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கள்ளச்சாராய வியாபாரி எல்லப்பா என்பவருக்கும் போலீஸார் வலை விரித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை கிடைத்த பின்னரே அவர்கள் குடித்த சாராயத்தில் எது கலக்கப்பட்டிருந்தது என்பது தெரிய வரும்.
விஷச்சாராயத்திற்கு 9 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து பலியானோரின் கிராமங்களில் பெரும் சோகம் குடி கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications