போலீசிடம் மெட்டல் டிடெக்டர் திருடிய பெண் கைது
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசாரிடம் இருந்த மெட்டல் டிரெக்டர் திருடு போன விவகாரத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சூட்கேஸ் என நினைத்து மெட்டல் டிடெக்டர் இருந்த பெட்டியை அவர் திருடியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 8 நுழைவு வாயில்களிலும் மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பார் கவுன்சில் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் கருவி கடந்த மாதம் 28ம் தேதி காணாமல் போனது. இதையடுத்து ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த டிடெக்டரை மீட்க விசாரணை நடந்து வந்தது.
இந் நிலையில் ஹரியானா மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம் நெமிலிக்கு இலவச கலர் டி.விக்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.
செங்கத்தை அடுத்த அரசங்கண்ணி என்ற கிராமம் அருகே லாரி வந்தபோது அதிலிருந்து ஒரு சூட்கேஸ் ரோட்டில் விழுந்தது. அப்போது பின்னால் ஜீப்பில் வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சூட்கேஸை மீட்டனர்.
அதை திறந்து பார்த்தபோது அதில் மெட்டல் டிடெக்டர் இருந்தது. இதையடுத்து லாரியை விரட்டிச் சென்று செங்கம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் மடக்கினர்.
லாரியில் டிரைவரும், ஒரு பெண்ணும் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரித்போது அந்தப் பெண் கிருஷ்ணகிரி மாவட்டம் தள்ளபாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரையின் மனைவி சாந்தி (44) என்று தெரியவந்தது. அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டரை திருடியதை ஒப்புக் கொண்டார்.
தனது கணவன் மீதான ஒரு வழக்கு விசாரணைக்காக மே 28ம் தேதி உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளார் சாந்தி. அப்போது பார் கவுன்சில் நுழைவு வாயிலில் இருந்த சூட்கேசை திருடிச் சென்றுள்ளார்.
அதை திறக்க முடியாததால், தனது உறவினரான லாரி டிரைவரிடம் போன் மூலம் கூறியுள்ளார். அவர், தான் வேலூர் நோக்கி போய்க் கொண்டிருப்பதாகவும், சூட்கேசுடன் நெடுஞ்சாலைக்கு வருமாறு, கூறி சாந்தியை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.
லாரியில் வைத்து அதை திறந்து பார்த்துள்ளனர். அதிலிருந்த மெட்டல் டிரெட்க்டரை வெடிகுண்டு என நினைத்து பயந்து போய் ரோட்டில் வீசியுள்ளனர்.
அப்போதுதான் அது போலீசாரிடம் சிக்கியது. சாந்தியை போலீசார் கைது செய்து சென்னை நீதிமன்ற வளாக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications