யுரேனியம் தொடர்ந்து கிடைக்க அணு ஒப்பந்தம் அவசியம்: கலாம்

பெங்களூர் வந்த கலாம் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அணு சக்தி ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, நமது தோரியம் அணு உலைகள் தயாராகும் வரை நமக்கு தொடர்ந்து யுரேனியம் தேவைப்படுகிறது. அதற்கு அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்றார் கலாம்.
முன்னதாக விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான 3 நாள் சர்வதேச மாநாட்டை கலாம் தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது கூறுகையில், அதிகரித்து வரும் அனல் மின்சார உற்பத்தியால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகிறது. எனவே நீர் மின்சாரம், அணு மின்சாரம், சூரியசக்தி, பயோ எரிபொருள் ஆகியவற்றை நாம் அதிக நாட வேண்டியது அவசியம். நமது எதிர்கால எரிபொருள் தேவையை இவைதான் பூர்த்தி செய்ய முடியும்.
இதற்கு சந்திராயன் திட்டம் மிகவும் அவசியம். சந்திரனில் ஏராளமான தோரியம்-3 உள்ளது. இது நமக்குக் கிடைத்தால் நாட்டுக்கு பல பலன்கள் கிடைக்கும். அது கிடைக்க வேண்டுமானால், நாம் சந்திரனுக்கு செல்ல வேண்டியது அவசியம். எனவே நமது சந்திராயன் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தோரியம்-3 மட்டுமல்லாமல், ஹீலியம்-3யும் அங்கு அதிகம் உள்ளது. அதுவும் எரிபொருளுக்கான முக்கிய ஆதாரமாகும்.
சந்திரனுக்கு செல்வதை வைத்து, செவ்வாய்க்கு செல்லும் திட்டத்தையும் நாம் தீட்ட வேண்டும். எதிர்காலத்தில் பூமி, சந்திரன், செவ்வாய் ஆகியவற்றை ஒரே கிரகமாக பார்க்கும் நிலைமை உருவாகும். மூன்றிலுமே மனித நடமாட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, சந்திர பயணம் மிகவும் முக்கியமானது.
சந்திரனில் தண்ணீர் இருக்கிறதோ, எரிபொருள் ஆதாரம் இருக்கிறதோ, நமக்கு நல்லதொரு மாற்று வாழிடம் தேவை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் என்றார் கலாம்.












Click it and Unblock the Notifications